இலங்கையின் கோரிக்கை மொஸ்கோவில் பரிசீலனையில் உள்ளது - பிரதி வெளிவிவகார அமைச்சர்
ரஷ்யாவின் இயற்கை வளங்கள் அளவற்றவை அல்ல. எங்களது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பெற பல நாடுகள் வரிசையில் நிற்கின்றன
இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதில் நேர்மறையான முடிவுகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம். எங்களது பிரதி அமைச்சர் மார்ஷாவினிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது மொஸ்கோவில் பரிசீலனையில் உள்ளன. கூடுதல் எண்ணெய் தேவைப்படும் ஒரே நாடு இலங்கை மட்டுமல்ல. எங்களிடம் உள்ள வளங்களைக் கொண்டு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென் தெரிவித்தார்.
கொழும்பில் 01-04-2026அன்று ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் நடத்திய அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,
கேள்வி: இலங்கைக்கு ரஷ்யா எரிபொருளை வழங்குமா?
பதில்: கடந்த வாரம் எங்களது எரிசக்தித் துறை துணை அமைச்சர் இங்கு (இலங்கை) மேற்கொண்ட பயணம், ஒரு நல்ல உடன்படிக்கைக்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இலங்கைக்கு எரிசக்தி வழங்குவதில் நேர்மறையான முடிவுகள் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம். எங்களது பிரதி அமைச்சர் மார்ஷாவினிடம் அளிக்கப்பட்ட கோரிக்கைகள் இப்போது மொஸ்கோவில் பரிசீலனையில் உள்ளன. கூடுதல் எண்ணெய் தேவைப்படும் ஒரே நாடு இலங்கை மட்டுமல்ல. எங்களிடம் உள்ள வளங்களைக் கொண்டு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியுமா என்பதை நாங்கள் ஆய்வு செய்வோம்.
ரஷ்யாவின் இயற்கை வளங்கள் அளவற்றவை அல்ல. எங்களது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் பெற பல நாடுகள் வரிசையில் நிற்கின்றன. எனினும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை நாங்கள் முழுமையாக நிறைவேற்றுவோம்.
ரஷ்யாவின் வளங்களைப் பெற விரும்பும் அனைத்து நாடுகளுக்கும் அவற்றை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஆசிய நாடுகள் அனைவரிடமும் நாங்கள் கொண்டுள்ள நல்உறவில் இருந்து நாங்கள் மாறவில்லை. எங்கள் கொள்கை உறுதியானது; அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி வளங்களை வாங்குவதற்கான தடையை அமெரிக்கா இப்போது நீக்கியுள்ளது. ஆசியப் பிராந்திய நாடுகள் இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆசிய நாடுகளுடனான எங்களது உறவு உடனடி வணிகம் முறையில் அமையாமல், கச்சா எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி போன்ற எரிசக்தி துறைகளில் நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமையவே நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள 'இரண்டாம் நிலைத் தடைகள்' காரணமாக, ரஷ்யாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த நாடுகள் தயங்குகின்றன. அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு இலக்காகிவிடுவோமோ என்ற அச்சத்தால், அந்த நாடுகளுடனான எங்களது எரிசக்தி ஒத்துழைப்பில் தற்காலிக சரிவு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது. இப்போது நிலைமை மாறியுள்ளது.
மீண்டும் சொல்கிறேன், எந்தவொரு நாட்டினதும் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பு என்பது அமெரிக்கா தனது கூட்டாளிகளுக்கு வழங்கும் ஒரு சிறிய 'வாய்ப்பை பயன்படுத்துவதாக இல்லாமல், நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.
கேள்வி: இலங்கையில் இரண்டு சிறிய அணுமின் நிலையங்களை அமைப்பது குறித்து பலமுறை பேசப்பட்டது. அமைச்சர்கள் கூட ரஷ்யா சென்று வந்தனர். ஆனால் அது ஏன் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை?
பதில்: இலங்கையில் அணுசக்தி திறனை மேம்படுத்துவதில் ஆர்வம் இருப்பதை நான் அறிவேன். ஆனால் இந்தத் திட்டம் ஏன் இன்னும் தொடங்கவில்லை என்பதற்கான துல்லியமான காரணங்கள் எனக்குத் தெரியாது எங்களிடம் மிதக்கும் சிறிய அணுமின் நிலையம் என்ற ஒரு தனித்துவமான தொழில்நுட்பம் உள்ளது. இது ஒரு மிகப்பெரிய கப்பலில் அமைக்கப்பட்ட மின் நிலையம். எந்த நாட்டுக்காவது மின்சாரம் தேவைப்பட்டால், இந்தக் கப்பல் அந்த நாட்டின் கரைக்கு அருகில் வந்து மின்சாரம் வழங்க முடியும். இத்தகைய தொழில்நுட்பம் ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளது. இலங்கை விரும்பினால் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்."
கேள்வி: ரஷ்யா எரிபொருளை டொலருக்கு வழங்குமா? அல்லது ருபிள் நாணயத்துக்கு வழங்குமா?
பதில்: மற்ற நாடுகளுடனான எங்களது வர்த்தகம் டொலர் அல்லது யூரோ போன்ற முக்கிய நாணயங்களிலிருந்து விலகி, மிக வேகமாக தேசிய நாணயங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகளவில் டொலரின் ஆதிக்கம் குறைகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு உலக வர்த்தகத்தில் டொலரின் பங்கு சுமார் 67 வீதமாக இருந்தது. ஆனால் இப்போது அதன் பங்கு சுமார் 40 வீதமாக குறைந்துள்ளது.





