இலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம் - காஞ்சன பானகொட அத்மிராலாக பதவி உயர்த்தப்பட்டு ஓய்வு
அத்மிரால் காஞ்சன பானகொடவின் ஓய்வைத் தொடர்ந்து, கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அத்மிரால் டெமியன் பெர்னாண்டோ, வைஸ் அத்மிரால் நிலைக்குப் பதவியுயர்த்தப்பட்டு, 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் 27 ஆவது புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டெமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் காஞ்சன பானகொட 'அத்மிரால்' நிலைக்குப் பதவியுயர்த்தப்பட்டு ஓய்வுபெறவுள்ளார்.
ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த நியமனமும் பதவியுயர்வுக்கான உத்தரவும் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய கடற்படைத் தளபதியான வைஸ் அத்மிரால் காஞ்சன பானகொட, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 30-06-2026 அன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 'அத்மிரால்' (4 நட்சத்திர அந்தஸ்து) நிலைக்குப் பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
கடந்த 2024 டிசம்பர் 31 அன்று இலங்கையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாக 3 நட்சத்திர அந்தஸ்து கொண்ட வைஸ் அத்மிரால் நிலைக்கு அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் 4 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற பின்னர் கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த அத்மிரால் காஞ்சன பானகொடவுக்கு, கடற்படை மரபுகளுக்கு இணங்க கடற்படையினரால் முழுமையான அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று தனது கடற்படைக் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
அத்மிரால் காஞ்சன பானகொடவின் ஓய்வைத் தொடர்ந்து, கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அத்மிரால் டெமியன் பெர்னாண்டோ, வைஸ் அத்மிரால் நிலைக்குப் பதவியுயர்த்தப்பட்டு, 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பின்படி, இந்த நியமனமானது இன்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் புதிய கடற்படைத் தளபதியிடம் கையடைக்கப்பட்டது.





