களுத்துறை துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிள், உடைகள் மீட்பு
சந்தேகநபர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிள் நேற்று காலை பண்டாரகம - ஹொரண வீதியின் கொத்தலாவல சந்திக்கு அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிற்கு அருகில் வைத்து கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரல் மீட்கப்பட்டது.
களுத்துறை வடக்கு - வஸ்கடுவ, வாடியமங்கட பகுதியில் 14-02-2026 அன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையது எனச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் கொலையாளிகள் பயன்படுத்தியதாகக் சந்தேகிக்கப்படும் ஆடைகள் பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் நேற்று (15) மீட்கப்பட்டுள்ளன.
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் வாடியமங்கட பகுதியில் அமைந்துள்ள முதலாவது புகையிரத நிறுத்தம் வீதியில் உள்ள சிறு உணவகம் ஒன்றிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த உணவகத்தின் உரிமையாளரான 32 வயதுடைய இளைஞர் மீது, அங்கிருந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி சரமாரியாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், கொலையின் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், சந்தேகநபர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிள் நேற்று காலை பண்டாரகம - ஹொரண வீதியின் கொத்தலாவல சந்திக்கு அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிற்கு அருகில் வைத்து கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரல் மீட்கப்பட்டது.
மேற்படி மோட்டார் சைக்கிளில் கருப்பு நிறத்திலான பாதுகாப்பு தலைக்கவசம் ஒன்றும், அதற்கு அருகில் தரையில் கருப்பு நிறத்திலான புதிய ஜாக்கெட் ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ள வயல்வெளியில் மஞ்சள் நிறத்திலான அரிசிப் பை ஒன்றினுள் போடப்பட்டிருந்த காலணி சோடி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்றிருந்த இடத்தை ஸ்தளப்பரிசோதகர்கள் சோதனையிட்டிருந்தனர்.
குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக களுத்துறை வடக்கு பொலிஸார் உட்பட மூன்று விசேட விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற விதம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நோக்கம் குறித்து பொலிஸார் சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.





