சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்
நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதை பணிப்புறக்கணிப்பு என்ற கோணத்தில் பார்க்க முடியாது. எதிர்கால பாதுகாப்புக்காக இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
நாட்டில் தற்போது காணப்படும் படுகொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கிறோம். சகல சட்டத்தரணிகள் சமூகத்தினரும் இன்று நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். உறுதிப்படுத்தாத விடயங்களை உண்மை என்று பொலிஸார் குறிப்பிடுவதை மறுப்பதுடன், கடும் அதிருப்தியையும் வெளியிடுகிறோமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
தலங்கம அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசணை கொண்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று கொழும்பில் உள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட குற்றப்பிரேரணை தொடர்பில் ஆராய்வற்கு பொதுச்சபை கூட்டம் நடத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பில் 15-02-2026 அன்று நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் 3500 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துக் கொண்டதுடன், பலர் நிகழ்நிலை ஊடாக கலந்துக் கொண்டுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி விவகாரம் குறித்து பொதுச்சபை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த பொதுச்சபை கூட்டம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய குறிப்பிடுகையில்,
படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி விவகாரம் குறித்து விரிவாக கலந்துரையாடினோம். அத்துடன் பல தீர்க்கமான தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்.
நாட்டில் தற்போது காணப்படும் படுகொலை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கிறோம்.
நாடளாவிய ரீதியில் உள்ள சகல நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து சகல சட்டத்தரணிகள் சமூகத்தினரும் நாளை (இன்று) விலகியிருப்பார்கள். இது இலகுவானதொரு தீர்மானமல்ல, இருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் இனியொருபோதும் இடம்பெற கூடாது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பதை பணிப்புறக்கணிப்பு என்ற கோணத்தில் பார்க்க முடியாது. எதிர்கால பாதுகாப்புக்காக இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பொறுப்புக்கூற வேண்டிய சகல தரப்பினரும் உடனடியாக கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிஸார் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு பொறுப்பான தரப்பினருக்கு கடுமையாக வலியுறுத்திக் கொள்கிறோம்.
படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி விவகாரம் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூகமயப்படுத்துவது மற்றும் உண்மை என்று அவற்றை குறிப்பிடுவது தொடர்பில் பொலிஸாருக்கும் மற்றும் உரிய தரப்பினருக்கும் சட்டத்தரணிகள் சார்பில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
முன்வைக்கும் விடயங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக செயற்பட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.





