சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி தம்பதி மீதான துப்பாக்கிச்சூடு: 10 விசேட பொலிஸ் குழுக்கள் ஊடாக விசாரணைகள் ஆரம்பம்
சம்வத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஈ.பி. கேஐ -7738 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட காரில் பயணித்ததாக சந்தேகிக்கும் பொலிஸார், அந்தக் காரை அடையாளங் காண்பதற்கு பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் 10 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் காரை அடையாளங் காண்பதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
பல்பொருள் அங்காடியொன்றுக்கு அருகில் 13-02-2026 அன்று சுமார் 4.50 மணியளவில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் காருக்குள் இருந்த போது, பிரிதொரு காரில் வந்த இரு சந்தேகநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சம்வத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஈ.பி. கேஐ -7738 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட காரில் பயணித்ததாக சந்தேகிக்கும் பொலிஸார், அந்தக் காரை அடையாளங் காண்பதற்கு பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
அத்தோடு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் 10 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணைகளின்படி, இந்தத் தாக்குதலுக்கு டி - 56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி (Pistol) ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. நீதவான் விசாரணையைத் தொடர்ந்து, நேற்று சனிக்கிழமை சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன.
சட்டத்தரணி மல்லவாரச்சி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல நபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னணியிலேயே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பிற்கமைய எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது சந்தேகநபருக்கும் ஆதரவாக முன்னிலையாவதற்கு சட்டத்தரணிகளுக்கு உரிமை இருப்பதாகவும், எனவே இந்த கொலைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான விசாரணைகளுக்கமைய, சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் ரொஹமகம, பொதுஅராவ வீதி, அத்துருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர ஆகிய பாதைகள் வழியாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே வெள்ளிக்கிழமை மாலை வேளையில் மேற்கூறிய பாதைகளில் பயணித்த வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், தங்களது வாகன கமரா பதிவுகளில் இந்தச் சந்தேகத்திற்குரிய கார் பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அல்லது காணொளிகள் வைத்திருப்போர் மேல் மாகாண தெற்கு பிரதி பொலிஸ் மா அதிபரின் 071 8598008 இலக்கத்துக்கு, மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு பணிப்பாளரின் 071 8592279 இலக்கத்துக்கு அவற்றை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வழங்கப்படும் அனைத்துத் தகவல்கள் மற்றும் தகவல் வழங்குனர்களின் இரகசியம் பேணப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.





