'தித்வா' புயல் புனரமைப்புக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் டொலர் நிதியுதவியை பெற அமைச்சரவை அங்கீகாரம்
இந்திய அரசினால் மொத்தம் 450 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய 'தித்வா' புயல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கும் புனரமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்திய அரசாங்கத்திடமிருந்து 450 மில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
தித்வா புயல் காரணமாக இலங்கையில் 2.1 பில்லியன் டொலர் பெறுமதியான பௌதீகச் சேதங்களும், 1.4 பில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதாரச் சேதங்களும் ஏற்பட்டுள்ளதோடு, நாட்டின் ஒட்டுமொத்த மீள்கட்டமைப்புப் பணிகளுக்காக 3.5 பில்லியன் டொலர்கள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வனர்த்தத்தின் போது இந்திய அரசானது தனது 'சாகர்பந்து' நடவடிக்கையின் கீழ் அவசர கால நிவாரணங்களையும் அனர்த்த பதிலளிப்பு உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2025 டிசம்பர் 22 அன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்த சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு விசேட அனர்த்த நிவாரணப் பொதி ஒன்றை வழங்க உடன்பாடு எட்டப்பட்டது.
இதன்படி, இந்திய அரசினால் மொத்தம் 450 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதில் 350 மில்லியன் டொலர்கள் கடனாகவும், 100 மில்லியன் டொலர் நன்கொடையாகவும் வழங்கப்படவுள்ளன. இந்த 350 மில்லியன் டொலர் கடன் வசதியில், 250 மில்லியன் டொலர்கள் நீண்டகாலக் கடனாகவும் மற்றும் 100 மில்லியன் டொலர்கள் குறுகியகால கடன் தொகையாகவும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன், 100 மில்லியன் டொலர் கொடைத் தொகையானது உட்கட்டமைப்பு வசதிகள், தொடர்பாடல், சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, நீர் வழங்கல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளை உள்ளடக்கியவாறு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இந்தக் கடன் வசதிகள் மற்றும் நன்யகொடைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, இரு நாடுகளுக்கும் இடையே தேவையான இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.





