பயங்கரவாத தடை சட்ட நீக்க விடயத்தில் ஜனாதிபதி வாக்குறுதியை மீறிவிட்டார்: மனோ கணேசன்
பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக ஒழிப்பதாகக் கூறிவிட்டு இப்போது அதற்குப் பதிலாக ஒரு மாற்று சட்டத்தைக் கொண்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை மீறி அதற்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்வைத்து அதனை சட்டமாக்குவதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டவரைவு தொடர்பில் கருத்து வெளியிடும்பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போதைய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபானது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது என்ற பொதுவான கருத்துடன் நான் உடன்படுகிறேன். இதன் உள்ளடக்கம் குறித்துப் பேசுவதை விட ஜனாதிபதி மற்றும் அவரது சகாக்களின் அரசியல் ஒழுக்க நெறிகளை மீறியுள்ளதை நான் கூற விரும்புகின்றேன்.
முன்னாள் ஆட்சியாளர்களான மைத்ரி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்கள் மற்றும் சந்திரிகா ஆகியோரிடமிருந்து தாம் மாறுபட்டவர் என்றும் மக்களின் உண்மையான நண்பன் என்றும் காட்டியே அனுரகுமார ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று அதே அடக்குமுறை சட்டங்களை மாற்று உருவில் கொண்டு வருவது மக்களுக்கும் அவருக்கு வாக்களித்த சிங்கள ஈழத்தமிழ் மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.
1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட இந்த பயங்கரவாத தடைச்சட்டம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பலர் தடுத்து வைக்கப்பட்டனர் சித்திரவதை செய்யப்பட்டனர் காணாமல் போனார்கள் மற்றும் சிறைகளிலேயே கொல்லப்பட்டனர். இவை அனைத்தையும் ஜே.வி.பி நன்கு அறியும். இவற்றையெல்லாம் கண்டு கண்ணீர் வடித்தவர்கள் தான் அவர்கள்.
இன்னும் கூட ஏறக்குறைய 12 பேர் நீண்ட கால தண்டணை வழங்கப்பட்ட கைதிகளாக சிறையிலே இருக்கிறார்கள். நூங்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கையில் 150 மேற்பட்டோர் இருந்தனர். அவர்களை குறைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நாங்களே ஏற்படுத்தினோம். நீண்ட கால கைதிகளாக இருந்த 12 பேரை அநுரகுமார விடுவிப்பதாக கூறியிருந்தார்.
கடந்த காலங்களில் இச்சட்டம் தமிழர்களை மாத்திரம் இலக்கு வைத்தபோது மௌனமாக இருந்த தென்னிலங்கை சமூகம் அரகலய போராட்டத்தின் போது சிங்கள இளைஞர்களும் ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்ட போதே விழித்துக்கொண்டது. அப்போது அந்த போராட்டக்களத்தில் நின்று பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய் என உரக்கக் குரல் கொடுத்தவர்களில் அநுரகுமாரவும் முன்னணியில் இருந்தார்.
பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக ஒழிப்பதாகக் கூறிவிட்டு இப்போது அதற்குப் பதிலாக ஒரு மாற்றுச் சட்டத்தைக் கொண்டு வருவது ஏற்றுக் கொள்ள முடியாது.
அரகலயவில் அநுர உட்பட அனைவரும் இணைந்து அன்று எழுப்பிய கோஷம் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய் என்பதுதானே தவிர மாற்று என்பதல்ல. தமிழ் மக்களின் நீண்ட காலப் போராட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதியிலிருந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது இந்த நாட்டின் ஜனநாயகத்தை ஒடுக்கும் கருவி. அரசுக்கு எதிராக ஆயத வன்முறையினை இயக்கங்களோ அல்லது ஏனையோரோ செயற்படுத்தும் போது பயங்கரவாத தடை சட்ட சரத்துக்களை பயன்படுத்தலாம். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபை முற்றிலும் எதிர்க்கிறோம் ஜனநாயகத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.





