பெருந்தோட்ட வன் தாக்குதல்களுக்கு எதிராக அவசர பல்தரப்பு மாநாடு
இந்த விவகாரத்தின் அவசர தன்மையையும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வன்முறையையும் கருத்தில் கொண்டு, அமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி இந்த மாநாட்டை எவ்வித தாமதமும் இன்றி கூட்டுவது அவசியமாகும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் மீது அண்மைக்காலமாக அதிகரித்து வரும் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல்களை எதிர்கொள்வது தொடர்பில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளையும் உள்ளடக்கிய அவசர மாநாடொன்றை எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் கூட்டுவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 16-05-2026அன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அப்பாவி மக்கள் மீது அண்மைக்காலமாக வன்முறைத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்ளவும், பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சகல தரப்புகளையும் அழைத்து அவசர மாநாடொன்றைக் கூட்டுமாறு பாராளுமன்றத்தில் நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ கடிதம் மூலமும், நேற்று நேரடியாகத் தொலைபேசி மூலமும் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் இந்த அவசர வலியுறுத்தலை மேற்கொண்டேன். எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், பாராளுமன்ற சபாநாயகரின் இணக்கப்பாட்டுடன் வரும் புதன்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் இந்த விசேட மாநாட்டை கூட்டுவதாக என்னிடம் நேரடியாக உறுதி அளித்துள்ளார்.
இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து பாராளுமன்றத்தில் நான் உரையாற்றி, அமைச்சரின் அவதானத்தை கோரியிருந்தேன். என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர் தொண்டமான் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் இந்த விடயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும், கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் நான் நேரடியாக விவரித்ததுடன், நிலைமை தொடர்பான எங்களது கடுமையான கவலைகளையும் அவரிடம் எடுத்துரைத்தேன்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில், சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளை உள்ளடக்கிய மாநாட்டை கூட்டுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வாய்மொழி மூலமாகவும், கடிதம் மூலமாகவும் கேட்டுக்கொண்டேன்.
அதன்படி, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்யாரத்ன, பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சபரகமுவ மாகாணம், தென் மாகாணம், மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகிய மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் அனைத்து 22 பிராந்திய தோட்டக் கம்பனிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் ஆகியோரை இந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளேன்.
இவ்வாறானதொரு பின்னணியில், நேற்று முன்தினமும் உடபுசல்லாவ காவல் பிரிவுக்குள் மேலும் ஒரு வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு நபரொருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தின் அவசர தன்மையையும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வன்முறையையும் கருத்தில் கொண்டு, அமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி இந்த மாநாட்டை எவ்வித தாமதமும் இன்றி கூட்டுவது அவசியமாகும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து நானும், ஐந்து முக்கிய சிவில் செயற்பாட்டாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளோம். மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மீண்டும் மீண்டும் இடம்பெறும் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு ஒரு நிலையான, அமைதியான தீர்வை உருவாக்குவதே எங்களது பிரதான நோக்கமாகும் என்றார்.





