ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு உறுதியாகியுள்ளது - பெற்றோலிய கூட்டுத்தாபனம்
ப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் எதிர்பார்க்கும் அனைத்து கப்பல்களும் இலங்கையை வந்தடையும். கடந்த மாதமும் நாங்கள் எதிர்பார்த்த அனைத்து கப்பல்களும் நாட்டை வந்தடைந்தன.
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் கப்பல்கள் இந்த மாதம் தாமதமின்றி நாட்டுக்கு வருகைத் தரும். எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.
ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: எரிபொருள் கொள்வனவு குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் எரிபொருளை இறக்குவதற்கு பிரதானமாக இரண்டு துறைமுகங்கள் மட்டுமே உள்ளன. எனவே ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் எரிபொருள் கப்பல் அத்தகைய இடத்திற்கு வரக்கூடிய திகதிகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் குறித்தே தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றன. எனினும், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதியாகியுள்ளது.
நாட்டில் எக்காரணிகளுக்காகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. இன்று மற்றுமொரு டீசல் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது. அதில் சுமார் 32,000 மெற்றிக் தொன் டீசலும், 5, 000 மெற்றிக் தொன் விமான எரிபொருளும் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல், இம்மாதம் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் வரவுள்ளன. அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் எதிர்பார்க்கும் அனைத்து கப்பல்களும் இலங்கையை வந்தடையும். கடந்த மாதமும் நாங்கள் எதிர்பார்த்த அனைத்து கப்பல்களும் நாட்டை வந்தடைந்தன.
இதன் அடிப்படையில், பண்டிகைக் காலம் முடிந்து மே மாதம் இறுதி வரை எரிபொருள் கையிருப்பு போதுமானதாக உள்ளது. எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால், அதனைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் வலுசக்தி முகாமைத்துவத்துக்கான வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு அரச நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





