வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது - அரசாங்கம்
இறக்குமதிகளை சரியான முறையில் சந்தைக்குக் கொண்டு வந்து வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளால் டொலரின் பெறுமதிக்கு ஏற்படும் கூடுதல் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தேவையான டொலர் இருப்புகளைப் பாதுகாப்பதற்காகவுமே தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கான தீர்வைக் கட்டணம் தற்காலிகமாக மூன்று மாத காலத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாழ்வாதாரத் தொழில் வாகனங்களுக்கு இந்த வரி அதிகரிப்பு எவ்வகையிலும் பொருந்தாது என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வாகன இறக்குமதிக்கான மேலதிக வரி அறிவிப்பு பற்றிய செய்தி சமூகத்தில் தவறான முறையில் பரப்பப்பட்டு வருகின்றது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது இறக்குமதிக்கான தேவை அதிகரிப்பது இயல்பானது. தற்போதைய சூழ்நிலையில் நாம் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்தி, நடுத்தர கால பொருளாதார இலக்குகளை நோக்கி முன்னோக்கிச் செல்லும் ஒரு தருணத்தில், படிப்படியாக எமது இருப்புக்களை கட்டியெழுப்புவது அவசியமாகிறது. அதேபோன்று, இறக்குமதிகளை சரியான முறையில் சந்தைக்குக் கொண்டு வந்து வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாம் பயணிக்கும் போது, எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட மற்றும் எமது கொள்கைகளுக்கு வெளியேயான இரண்டு பிரதான காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்தின. முதலாவது, அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி நிலைமையாகும். எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் உடனடியாகத் தலையிட்டு, நாம் சேமித்து வைத்திருந்த நிதியைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி, அந்த நிலையை மிக விரைவாகக் கையாண்டோம்
இரண்டாவது காரணி, உலகப் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்ட உலகளாவிய நிலைமையாகும். இதனால் எரிபொருள் விலை உயர்வு, கடல்வழிப் போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்ததன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் உரங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்தன. இது எம்மால் தடுக்க முடியாத ஒரு சூழ்நிலையாக இருந்தபோதிலும், அதனை மிக விரைவாகக் கையாள்வதற்கு நாம் தலையிட்டுள்ளோம். இதன் விளைவாகவே, இலங்கையின் இந்த நிதியியல் முகாமைத்துவத் தலையீடு மிகவும் பாராட்டத்தக்கது என சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஒருவர் அண்மைய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்
இவ்வாறான நிலையில், நாட்டில் டொலரின் பெறுமதி அதிகரிக்கப் போகின்றது, இறக்குமதிகள் தடை செய்யப்படப் போகின்றன என சமூக ஊடகங்கள் மூலம் தேவையற்ற பயமும் சந்தேகமும் உருவாக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் செய்திகளைத் தவிர, சமூக ஊடகங்களில் பரவும் இவ்வாறான வதந்திகளை நம்ப வேண்டாம். எந்தவொரு வகையிலும் இறக்குமதிகளைத் தடை செய்யவோ அல்லது வெளிநாட்டு நாணய மாற்றங்களை முடக்கவோ அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.





