இலங்கை மீண்டெழும் திறன் ஊக்கமளிப்பதாக இருந்தது - கனடிய உயர்ஸ்தானிகர்
நாம் உலகளாவிய மாற்றங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்று இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் துடிப்பான பொருளாதாரங்கள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.
அண்மையில் ஏற்பட்ட தித்வா பேரழிவுக்குப் பிறகு, இலங்கை மக்களின் நெகிழ்ச்சித் தன்மையும், சவால்களை எதிர்கொண்டு மீண்டெழும் திறனும் எனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகரும், இலங்கை கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் காப்பாளருமான எச்.ஈ இசபெல் மார்ட்டின் புகழாரம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலின் மெஹோகனி பால்ரூம் மண்டபத்தில் 01-07-2026 அன்று நடைபெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைக் கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் அதிகாரிகள் இலங்கைக்கான உயர்ஸ்த்தானிகர்கள் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அவசரக்கால நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதில் கனடா பெருமையடைந்ததுடன், இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், பழங்குடியினரின் நிலங்களில் கட்டியெழுப்பப்பட்டு, உலகெங்கிலும் இருந்து வந்த மக்களால் வடிவமைக்கப்பட்ட இருமொழி பேசும், பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடாக கனடா திகழ்கிறது. இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்து, நம் அனைவரையும் ஒன்றிணைத்த இலங்கைக் கனேடிய வர்த்தக சம்மேளனத்துக்கு எனது நன்றிகள். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சம்மேளனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
கனடாவை வரையறுக்கும் பன்முகத்தன்மைக்கான மரியாதை, மனித உரிமைகள் பாதுகாப்பு, அமைதிக்கான அர்ப்பணிப்பு, உள்ளடக்கம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விழுமியங்களை இலங்கை மற்றும் மாலைதீவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இலங்கை மற்றும் மாலைதீவுகளுடன் கனடா கொண்டுள்ள உறவுகள் மிகவும் வலுவானவை. இவை கல்வி, அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் நெருக்கமான இருநாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை உள்ளடக்கியுள்ளன.
இலங்கையில் எனது முதலாண்டு பதவிக்காலத்தின் போது, நான் மேற்கொண்ட மாகாண ரீதியிலான கள விஜயங்கள் இந்நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் அதன் மகத்தான ஆற்றல் குறித்து எனது மதிப்பை ஆழப்படுத்தியுள்ளன. அண்மையில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளிப் பேரழிவுக்குப் பிறகு, இலங்கை மக்களின் நெகிழ்ச்சித் தன்மையும், சவால்களை எதிர்கொண்டு மீண்டெழும் திறனும் எனக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது. மேலும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான வழிகளைத் தேடும் கனேடிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வலுவான ஆர்வத்தையும் நான் நேரில் கண்டு வருகின்றேன்.
இந்த ஆண்டில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, கொழும்பில் எமது புதிய தூதரக காரியாலயத்தை அமைத்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சில இறுதி ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன, அவை முடிந்ததும் மிக விரைவில் அந்தப் புதிய இடத்தில் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளோம். இது இலங்கையுடனான கனடாவின் நீண்டகால அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
நாம் உலகளாவிய மாற்றங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்று இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் துடிப்பான பொருளாதாரங்கள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. இச்சூழலில், பொது மற்றும் தனியார் துறை தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம் எமது முழு பொருளாதார ஆற்றலையும் வெளிக்கொணர இலங்கைக் கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் பங்கு முன்னெப்போதையும் விட இன்று மிக அவசியமானதாக உள்ளது. நாம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கவும், வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் முடியும். கனடா மற்றும் இலங்கை இடையிலான நட்பு தொடர்ந்து வளரட்டும் என்றார்.





