உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகள் வெளியேறினர்
ஊடகவியலாளர் ஒருவர் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் நியாயமானது எனக் கருதுகின்றீர்களா எனக் கேட்ட போது, 'அது அரசாங்கத்துக்கு நியாயமானது. எமக்கு இல்லை' என்று கூறினார்.
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீகுவதற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதுவரைக் காலமும் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசித்து வந்த முன்னாள் ஜனாதிபதிகள் அவற்றிலிருந்து வெளியேறி தத்தமது சொந்த இல்லங்களில் குடியேறியுள்ளனர். அந்த வகையில் 11-09-2025 அன்று முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இவ்வாறு உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேறினர்.
கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியேறிய போது, ஆதரவாளர்கள் அங்கு கூடி கோஷமெழுப்பினர். அத்தோடு அவர் அங்கிருந்து வெளியேற முன்னாள் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பௌத்த மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் அங்கு வருதை தந்து அவரை சந்தித்திருந்தனர். சில இராஜதந்திரிகளும் இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்துக்குச் சென்றார். அங்கு அவரை வரவேற்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அவர் வெளியேறிய போது ஊடகங்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து கேள்வியெழுப்பின. எனினும் அவர் பதிலெதுவும் கூறவில்லை. பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் அரசாங்கத்தின் இந்த தீர்மானம் நியாயமானது எனக் கருதுகின்றீர்களா எனக் கேட்ட போது, 'அது அரசாங்கத்துக்கு நியாயமானது. எமக்கு இல்லை' என்று கூறினார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாரியாரிடமும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அவற்றுக்கு பதிலளித்த அவர், 'நான் எந்த சந்தர்ப்பத்திலும் அரவியல் பேசுவதில்லை.' என்றார். அவ்வாறெனில் இங்கிருந்து கவலையுடனா வெளியேறுகின்றீர்கள் எனக் கேட்ட போது, 'இல்லை. இல்லை. மகிழ்ச்சியுடனேயே செல்கின்றோம்.' எனக் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தது. எனவே அவர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனக்கு இது தொடர்பில் சட்ட பூர்வ அறிவித்தல் வரும் வரை விஜேராம இல்லத்திலிருந்து வெளிறேப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தரப்பு குறிப்பிட்டிருந்து. இந்நிலையிலேயே குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
உத்தியோகபூர்வ இல்லங்கள் தேவைக்கேற்ப ஒப்படைக்கப்படாவிட்டால், இணக்கத்தைக் கோரி எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய சட்டத்தின் விதிகளுக்கு இணங்க எதிர்காலத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





