எல் நினோ தாக்கம்: நிதி, விவசாயக் கொள்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
இயற்கை அனர்த்தங்களின் போது சர்வதேச நிதி நிறுவனங்கள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் நிதியை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன.
'எல் நினோ' மற்றும் 'லா நினா' போன்ற காலநிலை மாற்றங்களின் தாக்கம் நாட்டின் நிதி, நாணயம் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று முக்கிய கொள்கைத்துறைகளிலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அரசாங்கம் இது குறித்து தீவிர அவதானத்துடன் செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்த பாராளுமன்றக் குழுவில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார். மத்திய வங்கி, திறைசேரி மற்றும் விவசாய அமைச்சு ஆகியன தமது துறைசார் கொள்கைகளில் இதன் தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர், நாட்டின் விவசாயப் பங்களிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால், மத்திய அரசும் மாகாண சபைகளும் இணைந்து ஒரு தேசிய விவசாயக் கொள்கையை உருவாக்க வேண்டும். அத்துடன், மகாவலிப் பகுதிகள், பெரிய மற்றும் சிறிய நீர்நிலைகளை ஒன்றிணைத்து தேசிய நீர் மேலாண்மைத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும். எல் நினோவினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்படாவிட்டாலும், ஏனைய நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மூலம் உணவு, எரிவாயு மற்றும் எரிபொருட்களின் விலைகள் உலக சந்தையில் உயர்ந்து, அது எமது நாட்டின் கையிருப்புகளைப் பாதிக்கலாம். எனவே, இது குறித்து மத்திய வங்கி முன்கூட்டியே ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இயற்கை அனர்த்தங்களின் போது சர்வதேச நிதி நிறுவனங்கள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் நிதியை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றன. இதனால் எமது தற்போதைய திட்டங்கள் பாதிக்கப்படுவதால், அவ்வாறு பெறப்படும் நிதியை மீண்டும் ஈடுசெய்வது குறித்து சர்வதேச நிறுவனங்களுடன் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அனர்த்தக் காலங்களில் சர்வதேசத்திடமிருந்து கடன்களைப் பெறாமல், நிவாரண உதவிகளையே பெற வேண்டும் என்றும், அனர்த்தங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதிப்புகளின் நிதி மதிப்பை துல்லியமாகக் கணக்கிட வேண்டும் என்றார்.





