கொல்லப்பட்ட சட்டத்தரணி பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவரல்ல: அமைச்சர் விஜித ஹேரத்
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பொலிஸ் மற்றும் அரசாங்கத்தால் எந்த சந்தர்ப்பத்திலும் கொல்லப்பட்ட சட்டத்தரணி பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர் என குறிப்பிடப்படவில்லை. இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 17-02-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சி காலங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் அரசியல் தஞ்சமளிக்கப்பட்டமை காரணமாக வலுப்பெற்றன. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் என்ற ரீதியில் பல்வேறு தேசிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கமைய வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும். இந்த சம்பவம் மாத்திரமல்ல. இது போன்று மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை மீண்டும் இடம்பெறக் கூடாவையாகும். நேரடியாகவோ மறைமுகமாகவோ போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என அனைவரையும் வலியுறுத்துகின்றோம்.
பொலிஸ் மற்றும் அரசாங்கத்தால் எந்த சந்தர்ப்பத்திலும் கொல்லப்பட்ட சட்டத்தரணி பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர் என குறிப்பிடப்படவில்லை. அவை சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்களால் பரப்பப்பட்ட தவறான செய்தியாகும். அரசாங்கம் அவ்வாறான நிலைப்பாட்டிலும் இல்லை. இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்றார்.





