கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: சிங்கள ராவய பிரபாகரனின் உருவப்பட த்தை எரித்து எதிர்ப்பு
முப்பது வருட போரினால் இந்த நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கான துயரங்களைச் சந்தித்துள்ளனர்.
இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் நேற்றைய தினம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் அமைதியான முறையில் நினைவேந்தல் அனுஷ்ப்பு, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களை நினைவுக்கூர்ந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பின் ஆதரவாளர்கள், இந்த நினைவேந்தல் நிகழ்வானது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல் எனக் கூறி கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தையும் தீயிட்டு எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது.
எதிர்ப்பு தெரிவித்த சிங்கள் ராவய ஆதரவாளர்கள்
நினைவேந்தல் என்ற பெயரில் நாட்டில் மீண்டும் பயங்கரவாத சிந்தனைகளை விதைக்க ஒரு சில குழுக்கள் முயற்சிக்கின்றன. முப்பது வருடங்களாக இந்த நாட்டை பேரழிவுக்குள் தள்ளிய பயங்கரவாத கொள்கையை நாட்டில் மீண்டும் தோற்றுவிக்கவோ அல்லது கொண்டாடவோ நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார், இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது முற்றிலும் தவறானது. இந்த சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நாம் சட்டப்படி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். எனவே பொலிஸார் உடனடியாக தலையிட்டு இந்த நினைவேந்தலை நிறுத்த வேண்டும். நாட்டை அழிவுக்கு கொண்டுவந்தவர்க்கு நினைவேந்தல் நடத்த அனுமதி வழங்கியது யார்?
இங்கு கூடி நிற்பவர்கள் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததாக உலகுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்த நாட்டில் தமிழ் இனப்படுகொலை என்பதொன்று இடம்பெறவே இல்லை. அவ்வாறு ஒரு இனப்படுகொலை நடந்திருந்தால், இன்று எங்களோடு தோளோடு தோள் நின்று பழகும் தமிழ் நண்பர்கள் எவ்வாறு இந்த நாட்டில் பாதுகாப்பாக வாழ முடியும். இன்றும் இந்த நாட்டில் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற பாகுபாடு கிடையாது. நாங்கள் அனைவரும் இந்த நாட்டில் ஒரு தாயின் பிள்ளைகளாக, சகோதரர்களாகவே வாழ்கின்றோம்.
இங்கு நினைவேந்தல் என்ற பெயரில் பிரபாகரனின் பயங்கரவாத சிந்தனைகளுக்கு புத்துயிர் கொடுக்கப் பார்க்கிறார்கள். பயங்கரவாதத்தை ஆரம்பத்திலேயே ஒடுக்காவிட்டால், அவர்கள் மீண்டும் இந்த நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தயங்கமாட்டார்கள். ஆயுதம் ஏந்தி வருபவர்களுக்கு ஆயுதத்தாலேயே பதில் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நியதியாகும். கடந்த கால போரினால் ஒட்டுமொத்த நாடும் சீரழிந்தது போன்றதொரு நிலைக்கு இந்த நாட்டை மீண்டும் கொண்டு செல்ல நாம் அனுமதிக்க மாட்டோம்.
இந்த நினைவேந்தல் நிகழ்வின் பின்னணியில் சர்வதேச சதி உள்ளது. முப்பது வருட போரினால் இந்த நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கான துயரங்களைச் சந்தித்துள்ளனர். இராணுவத்தினர் தங்களது உயிர்களை தியாகம் செய்து மீட்டெடுத்த இந்த அமைதியான நாட்டில், மீண்டும் இனவாதத்தைத் தூண்டி குளிர்காய சிலர் முற்படுகின்றனர். கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் சில பிரிவினைவாத அமைப்புகளிடம் இருந்து பெருமளவிலான நிதியைப் பெற்றுக்கொண்டு, நாட்டை காட்டிக்கொடுக்கும் இவ்வாறான செயல்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு இந்த நாட்டில் வாழ தார்மீக உரிமை கிடையாது என்று கோசம் எழுப்பி தகாத சைகைகளினால் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.





