சித்திரவதைகளை தடுப்பது குறித்த இலங்கையின் கடப்பாட்டுக்கு ஐக்கிய நாடுகள் உபகுழு பாராட்டு - வெளிவிவகார அமைச்சு
இலங்கைக்கு வருகைதந்திருந்த சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரதிநிதிகள் கடந்த 15 ஆம் திகதியன்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவையும் சந்தித்தனர்.
சித்திரவதைகள் இடம்பெறுவதை தடுப்பதில் இலங்கை வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டையும், தடுப்புக்காவல் நிலையங்களுக்கான களவிஜயங்களை எவ்வித தடையுமின்றி எளிதாக்கியமையையும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரிதிநிதிகள் பாராட்டியதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது சுதந்திரம் பறிக்கப்படக்கூடிய பிற இடங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய நடைமுறைகள் அதிகாரிகளால் பின்பற்றப்படுகின்றதா என்பதை மதிப்பீடு செய்வதற்காக சுமார் 7 ஆண்டுகளின் பின்னர் கடந்த மாதம் 15 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தலைமையிலான ஜாகுப் ஜுலியன் செபெக், நிக்கா க்வாராட்ஸ்கெலிகா, அனிகா டோம்சிக் ஆகியோரடங்கிய பிரதிநிதிகள் கடந்த 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியதுடன் களவிஜயங்களையும் மேற்கொண்டனர்.
இதுகுறித்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கைக்கு வருகைதந்திருந்த சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் பிரதிநிதிகள் கடந்த 15 ஆம் திகதியன்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரையும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவையும் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது சித்திரவதைக்கு எதிரான, அதற்கு ஒருபோதும் இடமளிக்காத அரசாங்கத்தின் கொள்கையை ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகளிடம் இரண்டு அமைச்சர்களும் எடுத்துரைத்தனர். அத்தோடு மனித உரிமைகளைப் பாதுகாப்பதை இலக்காகக்கொண்டு, சம்பந்தப்பட்ட ஏனைய கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான தமது அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
அதனைத்தொடர்ந்து முக்கிய அமைச்சுக்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், அரச கட்டமைப்புக்களின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றும் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு என்பவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளின் இணைத் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் பொதுப்பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களம், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, புனர்வாழ்வுப் பணியகம் ஆகிய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கட்டமைப்புக்களில் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது சித்திரவதைகளைத் தடுத்தல் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையை செயற்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட சட்ட, நிர்வாக மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் குறித்தும் ஐ.நா உப குழுவினருக்கு மேற்படி அரச கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.
அத்தோடு இவ்விஜயத்தின் ஓரங்கமாக சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து இலங்கையில் சித்திரவதைச் சம்பவங்களின் போக்கு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினர்.
அதேவேளை இந்த விஜயத்தின் நிறைவில் சித்திரவதைகள் இடம்பெறுவதைத் தடுப்பதில் இலங்கை வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டையும், தடுப்புக்காவல் நிலையங்களுக்கான களவிஜயங்களை எவ்வித தடையுமின்றி எளிதாக்கியமையையும் ஐ.நா உபகுழு பாராட்டியது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





