சீனா-இலங்கை பொதுவான எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் நாம் தயாராகவுள்ளோம் - சீனத்தூதுவர்
105ஆண்டுகள் என்பது ஒரு வரலாற்று மைல்கல், அதைவிட முக்கியமாக இதுவொரு புதிய பயணத்தின் தொடக்கப் புள்ளியாகும்.
ஜனாதிபதிகளான ஷி ஜின்பிங் மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரால் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்துக்களை முழுமையாகச் செயற்படுத்துவதற்கும், இரு நாடுகளின் உள்நாட்டு நிலைமைகளுக்குப் பொருத்தமான வளர்ச்சிப் பாதைகளை கைகோர்த்து ஆராய்வதற்கும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சீனா-இலங்கை பொதுவான எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் தயாராகவுள்ளோம் என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
சீனாவுடன் பயணிப்பது என்பது வாய்ப்புகளுடன் பயணிப்பதாகும்; சீனாவை நம்புவது என்பது நாளைய தினத்தை நம்புவதாகும்; சீனாவில் முதலீடு செய்வது என்பது எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் 01-07-2026 அன்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றத்தின் 105ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் பிரதான நிகழ்வு பீஜிங்கில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச்செயலாளர் ஷி ஜின்பிங், கட்சி கடந்து வந்த புகழ்பெற்ற பயணத்தை மீள்நோக்கியதுடன், சீன மக்களினதும் கட்சியினதும் எதிர்கால வளர்ச்சிப் பாதையின் பிரகாசமான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய வளர்ச்சி முன்முயற்சி, உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சி, உலகளாவிய நாகரீக முன்முயற்சி மற்றும் உலகளாவிய ஆளுமை முன்முயற்சி ஆகிய நான்கு முக்கிய முன்முயற்சிகள், காலத்தின் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளித்து, சீனாவின் அறிவையும் தீர்வுகளையும் பகிர்ந்து வழங்கியுள்ளன. இந்த முன்மொழிவுகள் மற்றும் முன்முயற்சிகளைப் பாராட்டி உலகளவில் சுமார் 160 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பு வரலாற்றுக் காலம் தொட்டே நிலவி வருகிறது. இருநாட்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்கியுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளும் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்துடன் ஒருவரையொருவர் நடத்துகின்றன.
அரச ஆளுமை குறித்து நாம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பொதுவான வளர்ச்சிக்கான வழிகளையும் ஆராய்கிறோம். ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான வெற்றிகரமான சந்திப்பு சீனா-இலங்கை உறவுகளுக்கான புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளது.
கட்சிகளுக்கு இடையிலான உறவு என்பது சீனா-இலங்கை உறவுகளின் முக்கிய அங்கமாகும். இருதரப்புத் தொடர்புகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் கட்சிகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
சுயாதீனம், முழுமையான சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒருவரின் உள்விவகாரங்களில் மற்றொருவர் தலையிடாதிருத்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆளுமை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் நவீனங்கள் போன்ற திட்டங்களில் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களாலும் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்துக்களை முழுமையாகச் செயற்படுத்துவதற்கும், இரு நாடுகளின் உள்நாட்டு நிலைமைகளுக்குப் பொருத்தமான வளர்ச்சிப் பாதைகளை கைகோர்த்து ஆராய்வதற்கும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சீனா-இலங்கை பொதுவான எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் தயாராகவுள்ளோம்.
அத்துடன், தற்போதைய உலகில், ஒரு நூற்றாண்டில் காணாத மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. காலத்தின் ஓட்டம் ஒற்றுமையையும் பரஸ்பர உதவியையும் கோருகிறது. உலகிற்கு என்ன நடந்தது, நாம் அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்?' என்ற பெரும் கேள்விக்கு, சீனா தனது நான்கு முக்கிய முன்முயற்சிகளின் வழிகாட்டுதலுடன், அழகான உலகத்தைக் கட்டியெழுப்ப அனைத்து நாடுகளுடனும் கைகோர்க்கத் தயாராக உள்ளது.
105ஆண்டுகள் என்பது ஒரு வரலாற்று மைல்கல், அதைவிட முக்கியமாக இதுவொரு புதிய பயணத்தின் தொடக்கப் புள்ளியாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் மக்களுடன் பயணிக்கிறது. காலத்துடன் முன்னேறுகிறது. சீனாவுடன் பயணிப்பது என்பது வாய்ப்புகளுடன் பயணிப்பதாகும்;. சீனாவை நம்புவது என்பது நாளைய தினத்தை நம்புவதாகும்;. சீனாவில் முதலீடு செய்வது என்பது எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும்.
ஒரு புதிய வரலாற்றுத் தொடக்கப் புள்ளியில் நின்றுகொண்டு, உலக நாடுகளின் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுடன் இணைந்து சரியான பாதையைப் பின்பற்றவும், ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும், காலத்தின் பணியைச் சுமந்து, பரஸ்பர ஒத்துழைப்பின் புதிய பக்கத்தை எழுதவும் நாம் தயாராக உள்ளோம் என்றார்.





