ஜே.வி.பி. செயற்பாட்டாளர்ளுக்கு சீனாவில் பல பயிற்சிகளுக்கு எதிர்காலத்தில் திட்டம் - ரில்வின் சில்வா
சீனாவில் கல்வித் திட்டங்கள் மூலம் பயிற்சி அளிக்கும் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்பதை நன்றியுடன் கூறிக்கொள்ள வேண்டும்.
சீன கம்யூனிஸ் கட்சியினால் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு எதிர்காலத்தில் சீனாவில் கல்வி, பயிற்சி ஆகியவற்றை வழங்குவதற்கு பல நடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் 01-07-2026 அன்று இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சீன கம்யூனிஸ் கட்சியானது தற்போது உலகில் அதிகாரத்திலுள்ள மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக விளங்குகின்றது. 1949ஆம் ஆண்டு முதல் சீனாவின் நிர்வாகமானது சீனக் கம்யூனிஸ் கட்சியின் தலைமையின் கீழ் கொண்டு செல்லப்படுகிறது. இது ஒரு கட்சியின் ஆட்சியைத் தாண்டி, பெரும்பான்மையான மக்களால் கொண்டு நடத்தப்படும் 'மக்களின் ஆட்சியாக' மாறியுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட தனது வரலாற்றில், சீனாவின் கம்யூனிஸ் கட்சி ஆற்றியுள்ள பங்களிப்பும் காண்பித்துள்ள முன்மாதிரியும் அளப்பரியதாகும். சீன மக்களுக்கும், உலகிலுள்ள ஏனைய பல நாடுகளின் மக்களுக்கும், அதேபோன்று உலகளாவிய இடதுசாரி இயக்கங்களுக்கும் அது பெற்றுக்கொடுத்துள்ள வெற்றிகளும் வழங்கிவரும் ஒத்துழைப்புகளும் மிகவும் அதிகமாகும்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக பின்தங்கிய நிலையில் அரை-காலனித்துவ, அரை-நிலப்பிரபுத்துவ பண்புகளைக் கொண்டிருந்த சீனாவில், சாமானிய மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அடக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்தனர் என்பதற்கு வரலாறு சான்றாகவுள்ளது.
சீனாவிற்கு சுதந்திரத்தையும் சீன மக்களுக்கு விமோசனத்தையும் பெற்றுக்கொடுத்தமையானது, மாவோ சேதுங் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையின் கீழ் சீனக் கம்யூனிஸ் கட்சி முன்னெடுத்த வீரமிக்க போராட்டத்தின் விளைவாகும். அங்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி காட்டிய வீரியம், அர்ப்பணிப்பு, போராட்ட குணம், சகிப்புத்தன்மை மற்றும் தியாகம் என்பன இணையற்றவை ஆகும்.
1978ஆம் ஆண்டில் டெங் சியாவோபிங்கின் திறந்த பொருளாதாரத் திட்டம் மற்றும் அதனுடன் உருவான 'சந்தை சோசலிசம்' என்ற கருத்தாக்கத்தின் ஊடாக கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம் என்று அனைத்துத் துறைகளிலும் சீனா அடைந்துள்ள முன்னேற்றம் மிகவும் மகத்தானது.
குறிப்பாக, சீனாவின் தற்போதைய ஜனாதிபதியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான ஷி ஜின்பிங்கின் வழிகாட்டலின் கீழ், நவீனமயமாக்கல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சீனாவை உலகின் இரண்டாவது வல்லரசு பொருளாதாரக் கொண்ட நாடாக மாற்றுவதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றியடைந்துள்ளது.
தோழர் ஷி ஜின்பிங்கின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் கட்சிக் கட்டமைப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கமும் மிகவும் முக்கியமானதொன்றாகும். சீனக் கம்யூனிஸ் கட்சியை மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில், இடதுசாரிப் பண்புகளுடன் சாமானிய மக்களின் கட்சியாகக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானதொரு பணியாகும்.
சீனக் கம்யூனிஸ் கட்சியானது இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது என்பதை இந்த இடத்தில் நான் மரியாதையுடன் நினைவுகூர விரும்புகிறேன். 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி அநுர திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது, மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீனக் கம்யூனிஸ் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டமை மிகவும் முக்கியமானதொரு நிகழ்வாகும்.
அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சீனக் கம்யூனிஸ் கட்சியினால் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு சீனாவில் கல்வித் திட்டங்கள் மூலம் பயிற்சி அளிக்கும் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பல திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்பதை நன்றியுடன் கூறிக்கொள்ள வேண்டும்.
எதிர்காலத்திலும் இவ்வாறான கல்வித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தத் தருணத்தில், சீனக் கம்யூனிஸ் கட்சி எங்களுக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கும் உதவிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்கிறேன் என்றார்.





