தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளிடம் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி எழுப்பிய முக்கிய கேள்வி
பயங்கரவாதத்தடை சட்ட நீக்கத்தை வலியுறுத்தி சாணக்கியன் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை சமர்ப்பித்திருக்கிறார்' எனச் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அச்சட்டம் பதிலீடு செய்யப்படல் என்பவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது ஏன் அதற்கு நேரெதிராக மாறிவிட்டார்களென ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடனால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, முன்னர் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் இப்போது ஆளுந்தரப்பில் இருப்பது ஒன்றே வித்தியாசமென தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் பதிலளித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கும் அதன் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு 11-02-2026 அன்று காலை 9 - 10மணி வரை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதரகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் கார்மென் மொரெனோ ரேமுன்டோவும் பிரசன்னமாகியிருந்தார்.
இதன்போது பயங்கரவாதத்தடை சட்டத்துக்குப் பதிலீடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் உள்வாங்கப்பட்டிருக்கும் மிகமோசமான கூறுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடம் விளக்கமளித்த தமிழ்ப்பிரதிநிதிகள், முன்னைய அரசாங்கங்களினால் பயங்கரவாத ஒழிப்புச்சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன முன்மொழியப்பட்ட வேளையில், அதனை நிராகரித்ததுடன் பயங்கரவாதத்தடைச்சட்டம் எவ்வித பதிலீடுமின்றி முழுமையாக நீக்கப்படவேண்டும் என தேசிய மக்கள் சக்தி பின்பற்றிய கொள்கை குறித்தும் தெளிவுபடுத்தினர்.
அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடை சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என வலியுறுத்தி தாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த கையெழுத்துப் போராட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டமை, இச்சட்டத்தின் தொடர் பிரயோகத்துக்கு எதிராக அவர்கள் நிகழ்த்திய உரைகள் உள்ளிட்ட சகல விடயங்களையும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடம் எடுத்துரைத்தனர்.
அவற்றை செவிமடுத்த பாவோலா பம்பலோனி, 'அவ்வாறானதொரு நிலைப்பாட்டில் இருந்தவர்கள், இப்போது ஏன் இவ்வாறு மாறியிருக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?' என சுமந்திரன், சாணக்கியனிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சுமந்திரன், 'முதலில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள், இப்போது அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் இப்போதும் பாதுகாப்புத்தரப்பின்வசமே முழுமையான கட்டுப்பாடு இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகின்றது. அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை விட மோசமான புதியதொரு வரைவை முன்மொழியும்போது, நாமனைவரும் அதற்கு எதிராகக் குரலெழுப்புவோம். அதனையடுத்து அரசாங்கத்தினால் அவ்வரைவு வாபஸ் பெறப்படும் பட்சத்தில், அதுவே எமக்குப் பெரிய வெற்றியாகத் தென்படும். ஆனால் மறுபுறம் பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையிலேயே இருக்கும். இதுவே இப்புதிய வரைவு முன்மொழியப்பட்டதன் உள்நோக்கமாகும். ஆகையினாலேயே பயங்கரவாதத்தடை சட்ட நீக்கத்தை வலியுறுத்தி சாணக்கியன் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை சமர்ப்பித்திருக்கிறார்' எனச் சுட்டிக்காட்டினார்.
அதனையடுத்து பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் அதேவேளை, அதற்குப் பதிலாகப் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படும் பட்சத்தில், அது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டியது அவசியம் என்ற தமது நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி பாவோலா பம்பலோனி மீளவலியுறுத்தியதுடன், கட்சி சார்பில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு பற்றிய கரிசனைகள் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கிய ஆவணமொன்றை நாளைய தினத்துக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து மாகாணசபைத்தேர்தலை நடத்துவதில் நிலவும் தொடர் தாமதம், அதனை நடத்துவதற்கான அரசியல் தன்முனைப்பை அரசாங்கம் வெளிப்படுத்தாமை, மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறையில் நடத்துவது குறித்து சாணக்கியனால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் தனிநபர் பிரேரணை என்பன பற்றியும் பாவோலா பம்பலோனியிடம் சுமந்திரன் எடுத்துரைத்தார்.
குறிப்பாக படைத்தரப்பினரால் ஏற்பட்ட இழப்புக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கென ஸ்தாபிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் படைத்தரப்பின் பிரதிநிதிகள் அங்கம்வகித்தல், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாமை, பொறுப்புக்கூறல் விடயத்தில் இவை தவிர்ந்த வேறு நடவடிக்கைகள் எவையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாமை என்பன பற்றியும் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடம் கரிசனை வெளியிட்டனர்.





