தெற்கு உலக நாடுகளின் ஒருமித்த குரலாக இந்திய, சீன கூட்டுறவு அமைய வேண்டும்: எதிர்க்கட்சித்தலைவர் சஜித்
மாறிவரும் பூகோள அரசியல் ஒழுங்கில் 'தெற்கு உலக நாடுகள்' முக்கியமான பாத்திரத்தினைக் கொண்டிருப்பதோடு அவற்றின் நிலையான அணுகுமுறையானது ஸ்திரமான பூகோள அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதாக இருக்கும்.
'தெற்கு உலக நாடுகளில்' இந்தியாவும், சீனாவும் முக்கியமான இடத்தைக் கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றின் கூட்டுறவும், செயற்பாடுகளும் குரலற்றவர்களின் குரலாக அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கைக்கு இரு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமான வாங் ஜுன்செங் தலைமையில் 20ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் நான்காவது முழுமையான அமர்வு குறித்த விளக்கவுரையை வழங்கும் நிகழ்வு 23-12-2025 அன்று ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; மக்கள் சீனக்குடியரசானது, அச்சுறுத்தல்கள், அச்சங்கள், நெருக்கடிகள், உள்ளிட்ட அனைத்து விடயங்களிலிலும் இருந்து எவ்வாறு மீண்டெழுந்து தமது தேசிய நலன்களை அடைந்துகொள்ள முடியும் என்பதற்கான பல்வேறு உதாரணங்களை எம்முன் கொண்டிருக்கின்றது.
சீனாவானது, தற்போது பூகோளச் சக்தியாகும். அவர்களுடைய கொள்கைத் திட்டங்கள், நல்லாட்சி, தலைமைத்துவம் ஆகியன சீனாவின் உலகளாவிய நிலையை முன்நிறுத்துவதாக உள்ளது.
சீனாவானது, முதலாளத்துவமும், சமூக ஜனநாயகமும் எவ்வாறு ஒருங்கிணைந்து நல்லெண்ணத்துடன் செயற்பட முடியும் என்பதற்கான உத்திகளையும் முன்னுதாரணங்களையும் வெளிப்படுத்தி நிற்கின்றமையானது எமக்கான மிக முக்கியமான படிப்பினையாகும்.
அண்மைய காலத்தில் சீனா வறுமை ஒழிப்பை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயப்பொருளாக மாற்றியமையானது மிக முக்கியமானதொரு நகர்வாகும். சீனா வறுமை ஒழிப்பை தன்னுடைய தேசிய செயற்றிட்டத்துக்குள் உள்வாங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய யதார்த்த நிலைமைகள் காணப்படுகின்ற சூழலில் சீனா தன்னுடைய கொள்கைகளையும், திட்டங்களையும் அவற்றுக்கு இசைவானதாக முன்னெடுக்கின்றமையானது முக்கியமான விடயமாகும்.
இந்த நிலைமையானது, சீனாவின் தூரநோக்கிய சிந்தனையை வெளிப்படுத்துவதோடு 'தெற்கு உலக நாடுகளில்' (ஆசிய ஆபிரிக்க இலத்தின் அமெரிக்க நாடுகள்) முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றது. தெற்கு உலக நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முக்கியமான இடத்தைக் கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றின் கூட்டுறவும், செயற்பாடுகளும் குரலற்றவர்களின் குரலாக அமைய வேண்டும்.
மாறிவரும் பூகோள அரசியல் ஒழுங்கில் 'தெற்கு உலக நாடுகள்' முக்கியமான பாத்திரத்தினைக் கொண்டிருப்பதோடு அவற்றின் நிலையான அணுகுமுறையானது ஸ்திரமான பூகோள அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதாக இருக்கும்.
தெற்கு உலக நாடுகளின் பிரதிநிதிகளாக அனைவரும் கூட்டிணைந்த செயற்பாடானது நீதிக்கும், நிலையான சமானத்துக்கும், கூட்டுக்குரலுக்கும் அடித்தளமிடுகின்றது. அதற்கான உறுதிப்பாட்டினை நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்றார்.





