நாட்டை வந்தடைந்தார் நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அவர் நேரடியாகப் பார்வையிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 16-02-2026 அன்று நாட்டை வந்தடைந்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் பரந்துபட்ட சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் பின்னரான மீட்சி மற்றும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியை அடுத்து உருவாகியிருக்கும் சவால்கள் என இலங்கை மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் பின்னணியிலேயே நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்த கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, 17-02-2026 அன்று புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் பரந்துபட்ட சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார். இச்சந்திப்புக்களின்போது இலங்கையின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்பது பற்றி ஆராயப்படவுள்ளது.
அதேவேளை 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அவர் நேரடியாகப் பார்வையிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தனது இலங்கை விஜயம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருக்கும் நேர்காணலில், 'அண்மைய சில ஆண்டுகளாக முகங்கொடுத்துவரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், அவற்றிலிருந்து மிகவலுவாக மீண்டெழும் தன்மையை வெளிக்காட்டிவரும் இலங்கை மக்களுடன் நாம் உடன்நிற்பதை வெளிக்காட்டும் வகையிலேயே நான் இலங்கைக்கு வருகைதருகின்றேன். நெருக்கடி நிலையில் இலங்கை மக்கள் வெளிப்படுத்திய மீண்டெழும் தன்மை உண்மையிலேயே ஆச்சரியமளிக்கின்றது' என கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா குறிப்பிட்டுள்ளார்.





