நிலையான வளர்ச்சிக்கு சீர்திருத்தத்தை தொடருங்கள்: நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்
தித்வா சவாலின்போது, இந்நாட்டில் முன்பு நடந்தது போன்று அரசியலையும் பொருளாதாரத்தையும் குழப்பிக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை
அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடத்தில் வலியுறுத்தியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருடன் 17-02-2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டேன்.
இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் சர்வதேச நாணய நிதியம் அளித்த பங்களிப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், அந்த பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாகவே தித்வா போன்ற ஒரு பாரிய பேரழிவை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
தித்வா சவாலின்போது, இந்நாட்டில் முன்பு நடந்தது போன்று அரசியலையும் பொருளாதாரத்தையும் குழப்பிக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தி, கிடைத்துள்ள இந்த பொருளாதார முன்னேற்றத்தின் நன்மைகள் பொதுமக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் அடுத்த நோக்கம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாட்டின் குறைந்த வருமானம் கொண்ட கிராமப்புற மக்கள் என்றும், அவர்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மனித வள மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஒரு விரிவான செயற்திட்டத்தை திட்டமிட்டுள்ளது என்றும், இந்த செயல்முறையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக அவசர நிதி உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட முகாமைத்துவப் பணிப்பாளர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கைகளையும், சவால்களை எதிர்கொண்டு திட்டமிட்ட ரீதியில் மீண்டெழுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கு இரு தரப்பினருக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு மீண்டும் இங்கு உறுதிப்படுத்தப்பட்டது.





