பொருளாதார நெருக்கடியால் சுகாதாரக் கட்டமைப்பு கடும் பாதிப்பு - வைத்தியர் சமல் சஞ்சீவ
அறுவை சிகிச்சைகளுக்கான உபகரணங்கள் மற்றும் அறுவை மாற்று சிகிச்சைகளுக்கான உபகரணங்களின் விலைகளும் சாதாரண மக்கள் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில் அண்மையில் மின் கட்டண உயர்வு மற்றும் மறைமுக வரிகள் காரணமாக நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்று வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், டொலர் நெருக்கடியால் மருந்து இறக்குமதிச் செலவுகள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் சந்தையில் மருந்துகளின் விலைகள் மேலும் 25 சதவீதத்துக்கும் அதிகமான சதவீதத்தால் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். அதேவேளை மின் கட்டண அதிகரிப்பு காரணமாக மருந்தகங்கள் குளிரூட்டிகளை முறையாக பயன்படுத்தாது மருந்துகளின் தரம் குறைந்து அவை வீணாகும் நிலை உருவாகியுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வானது தனியார் மருத்துவமனை கட்டணங்கள், வைத்திய பரிசோதனைகள் மற்றும் சிறிய மருத்துவ சிகிச்சைகள் முதல் பெரியளவிலான மருத்துவ சிகிச்சைகள் வரையான கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக நோயாளிகள் மருத்துவத்துக்கு செலவிட வேண்டிய தொகை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் மருந்து எடுப்பதை குறைப்பது, பரிசோதனைகளை தவிர்ப்பது மற்றும் சத்திர சிகிச்சைகளை பிற்போடுவது போன்ற ஆபத்தான முடிவ।களை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அறுவை சிகிச்சைகளுக்கான உபகரணங்கள் மற்றும் அறுவை மாற்று சிகிச்சைகளுக்கான உபகரணங்களின் விலைகளும் சாதாரண மக்கள் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இலவச சுகாதார சேவைக்கு பெயர் பெற்ற இலங்கையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை மக்களின் வாழ்வுக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது சுகாதாரத்துறை மீதான வரிகளை குறைப்பதாக வாக்குறுதியளித்த போதிலும் அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவ்வாறான பொருளாதார நெருக்கடியிலிருந்து பொதுமக்களையும், சுகாதாரத் துறையையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக முறையான கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.





