மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக குற்றவியல் சட்ட நடவடிக்கை: பிரதி பொலிஸ்மா அதிபர்
சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அவதானம் இன்மையே விபத்து அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உள்ளது.
இனிவரும் காலங்களில் மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனம் செலுத்தி விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக, வீதிப் போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் காட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் 29-12-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
கடந்த வருடத்தை விட வீதி விபத்துகள் 271 ஆல் அதிகரித்துள்ளதுடன், விபத்துகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், பாரிய விபத்துகளின் எண்ணிக்கையில் ஒருவித வீழ்ச்சியை மாத்திரம் காணக்கூடியதாக உள்ளது.
சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அவதானம் இன்மையே விபத்து அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உள்ளது. குறிப்பாக வருடாந்தம் வீதி விபத்துகளில் சுமார் 31 சதவீதமான பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு அடுத்தபடியாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் அதிகளவில் விபத்துகளை எதிர்கொள்கின்றனர். சாரதிகள் போதைப்பொருள் அல்லது மதுப்பாவனைக்கு அடிமையாகி வாகனம் செலுத்துவதே இத்தகைய விபத்துகளுக்குப் பிரதானக் காரணமாக உள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவனையில் அல்லது ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு எதிராகப் போக்குவரத்துச் சட்டத்திற்கு மேலதிகமாக, இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரினால் விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.





