மருந்து தர பரிசோதனை செயல்முறையை விரிவுபடுத்த விசேட நடவடிக்கை: அமைச்சர் நளிந்த
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆய்வக வசதிகளை மேம்படுத்தக் கால அவகாசம் தேவைப்படுவதால், இடைக்கால தீர்வாக ஏனைய அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெறுவது அவசியமென அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மருந்து விநியோகத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், சந்தேகத்திற்கிடமான மற்றும் சிக்கலுக்குரிய மருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மருந்துகளின் தரப் பரிசோதனை நடவடிக்கையை உரிய தரத்துடன் பேணுவதற்கும், அச்செயல்முறையை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் 25-12-2025 அன்று அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை மிகவும் முறையான மற்றும் சீரான வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் தரப் பரிசோதனை ஆய்வகத்தில் தற்போது காணப்படும் சில மட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஏனைய அரச நிறுவனங்களின் ஆய்வக வசதிகளைப் பயன்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ள இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம், உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் , கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் , மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இச்செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் ஆய்வக வசதிகளை மேம்படுத்தக் கால அவகாசம் தேவைப்படுவதால், இடைக்கால தீர்வாக ஏனைய அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெறுவது அவசியமென அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், மருந்து விநியோகத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் சந்தேகத்திற்கிடமான மற்றும் சிக்கலுக்குரிய மருந்துகளுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதனைகளை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கிறேன். நிறுவனங்களுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பு மற்றும் தர அறிக்கைகள் தொடர்பான மேற்பார்வை நடவடிக்கைகளை வலுப்படுத்துவது அவசியம் என்றார்.





