முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆவது நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான உறவுகள் பிரசன்னமாகி, உயிரிழந்த மற்றும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
2009ஆம் ஆண்டு இறுதிப் போர்க் காலத்தில் நிகழ்ந்தேறிய கொடூரங்களை ரணங்களாக சுமந்த மக்கள் கண்ணீருடன் தமது உறவுகளுக்கு அஞ்சலிகளை செலுத்தி ஆன்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
18-05-2026அன்று காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் காலை 10.29 க்கு நினைவொளி சத்தம் எழுப்பப்பட்டு 10.30க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து, இறுதி யுத்தத்தில் நான்கு அங்கத்தவர்களை இழந்த வற்றாப்பளையை சேர்ந்த சிறீறஞ்சன் ரினோசாவால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து தமது உறவுகளை தொலைத்தவர்கள் பிரதான சுடருக்கு அஞ்சலி செலுத்தியதோடு மலர்களைத்தூவி கண்ணீர் மல்ல கதறி அழுதனர்.
அத்துடன், மதகுருமார்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் என்று பலரும் கலந்து கொண்டு உயிர்நீத்தோருக்கு உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதோடு முள்ளிவாய்க்கால் முற்றம் கண்ணீரால் நனைந்திருந்தது.
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர்நீத்தவர்களுக்கு நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தினார்.
நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய அவர் வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனையும் மேற்கொண்டிருந்தார்.
இதில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஆவணப்படக்கண்காட்சி முன்னெடுக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நினைவேந்தலும் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொன். சிவகுமாரின் சிலைக்கு மாலை அணிவித்து முள்ளிவாய்க்கால் நினைவாக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களில் 100 பேருக்கு அரிசிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நினைவேந்தல் பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்றது.முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் இறுதி நாட்கள் வரை அங்கிருந்து இனப்படுகொலையின் உயிர் வாழும் சாட்சியமாக வாழும் வர்த்தகர் க.யோகநாதன் பொதுச்சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கமும் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதேவேளை, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி விநியோகிக்கப்பட்டது.
இதன்போது, தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவரும் போராளியுமான சி.தேவகுமார் நினைவுச்சுடர் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நூற்றுக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கி அருந்திச் சென்றனர்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், பொதுச் செயலாளர் ம.கஜேந்திரன் ஆகியோருடன் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
கிளிநொச்சி
கிளிநொச்சி நகரில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் மூடப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் பல்வேறு கிராமங்களிலும் முன்னெடுக்கப்பட்டது. விசேடமாக முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதோடு ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.
சமத்துவக்கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டதோடு கட்சியின் பொதுச்செயலார் சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் அதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
மன்னார்
மன்னாரில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் தலைமையில் மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
வவுனியா
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் மிகவும் உணர்வுப்பூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா திருநாவற்குளம் 03ஆம் ஒழுங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை போராளிகள் நலன்புரி சங்கம் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
போர்க்காலத்தின் கொடூரமான வலிகளையும் பட்டினியால் மக்கள் துடித்த அந்தத் தியாக வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் நிகழ்வின் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் இந்தக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டதோடு நினைவேந்தலும் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சியின் குருமண்வெளி வட்டார கிளையின் ஏற்பாட்டில் பிரதேச சபை உறுப்பினர் பத்மதேபு தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன் , போரதீவுபற்று பிரதேச சபையின் உப தவிசாளர் கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று வடக்கு பிரதேச கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி வழங்கும் நிகழ்வும் கதிரவெளியில் நடைபெற்றது.
இதேவேளை, மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது. மறத்தமிழர் கட்சியின் வாகரை கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் படுகொலையினை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
அம்பாறை
கல்முனை மாநகரத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பில் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டதுடன் உயிர்நீத்தோருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருகோணமலை
இலங்கை தமிழ் அரசு கட்சியினர் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் நடைபெற்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா (சுப்ரா) உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உண்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு கடற்கரைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்றது.
கடற்கரைச்சேனை கிராம மக்கள் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மூதூர் பிரதேச சபை தவிசாளர் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த நினைவேந்தல் வேளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வெருகல், ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் நடைபெற்றது. பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வின்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அவ்வேளை முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





