வரிக்கு மேல் வரி விதிக்கிறது அரசாங்கம் - கோடீஸ்வரன் எம்.பி.
சரியான பொறிமுறையில் உற்பத்தி மற்றும் முதலீட்டை கூட்டுவதன் மூலமே நாங்கள் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்.
வரிக்கு மேல் வரி விதித்து ஏழை மக்கள் மீது வரி சுமையை அதிகரிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும் .இவை மக்கள் மீது சுமைகளை சுமத்துவதாக இருக்குமே தவிர அவர்களுக்கு நிரந்த தீர்வுகளை வழங்குவதாக அமையவில்லை. சரியான பொறிமுறையில் உற்பத்தி மற்றும் முதலீட்டை கூட்டுவதன் மூலமே அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 19-05-2026 அன்று நடைபெற்ற உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: வரிக்கு மேல் வரி விதித்து ஏழை மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன். உள்நாட்டு உற்பத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புகளை மேற்கொண்டு அதன்மூலம் அந்நியசெலாவணியை சம்பாதித்து நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும். அதனை விடுத்து வரிகளை விதித்து, பொருட்களின் விலைகளை அதிகரித்து அதனை முன்னெடுக்கக்கூடாது.
வரியை மட்டும் அறவிட்டு இந்த நாட்டை பாதுகாக்க முடியுமா?, சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது அவர்களின் நிபந்தனை அடிப்படையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இவை எமது மக்கள் மீது சுமைகளை சுமத்துவதாக இருக்குமே தவிர அவர்களுக்கு நிரந்த தீர்வுகளை வழங்குவதாக அமையவில்லை. சரியான பொறிமுறையில் உற்பத்தி மற்றும் முதலீட்டை கூட்டுவதன் மூலமே நாங்கள் அந்நிய செலாவணியை ஈட்ட முடியும்.
ஆனால் இன்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததாக இருக்கின்றது. டொலரின் பெறுமதி இப்போது அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் நிலை ஏற்படுமாக இருந்தால் நாடு இன்னும் பாரிய வீழ்ச்சிக்குள் தள்ளப்படும் நிலைமையே உருவாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். நீங்கள் முன்னெடுக்கும் வேலைகள் மக்களின் நன்மை கருதியதாக இருக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.





