வாழ்க்கைச்சுமை தொடர்ந்து அதிகரிப்பு; முஜிபுர் எம்.பி சுட்டிக்காட்டு
பணவீக்கம் கடந்த ஒரு வாரத்துக்குள் நூற்றுக்கு 5வீதம் அதிகரித்துள்ளது. இதன் முகாமைத்துவத்தை அரசாங்கத்தினால் செய்யமுடியாமல் பலவீனமடைந்திருக்கிறது.
திறைசேரி நிறைந்து வழிவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றபோதும் மக்களின் வாழ்க்கை சுமை தொடர்ந்து அதிகரித்து செல்கிறது. அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது செய்ய முடியாத பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. கனவு உலகுக்கே நாட்டு மக்களை இவர்கள் கொண்டு சென்றார்கள். ஆனால் தற்்போது இவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்ட வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது டொலரின் பெறுமதி 290 ரூபா அளவிலே இருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் அது தற்போது 320 ரூபாவுக்கும் அதிக விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 3 தடவைகள் மின்சார கட்டணத்தை அதிகரித்திருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து, பணவீக்கம் கடந்த ஒரு வாரத்துக்குள் நூற்றுக்கு 5வீதம் அதிகரித்துள்ளது. இதன் முகாமைத்துவத்தை அரசாங்கத்தினால் செய்யமுடியாமல் பலவீனமடைந்திருக்கிறது.
அதேநேரம் அரசாங்கம் தற்போது வகனங்களுக்கு புதிய வரி ஒன்றை அதிகரித்து, வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய காத்திருந்தவர்களின் கனவை இல்லாமலாக்கி இருக்கிறது. மக்களுக்கு வாகனம் தொடர்பில் அரசாங்கம் ஆசையை வளர்த்து வந்தது. விஸ் கார் ஒன்றை 12 இலட்சத்துக்கு கொள்வனவு செய்ய முடியுமான நிலைக்கு கொண்டுவருவதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பு காரணமாக அனைத்து வாகனங்களும் சுமார் 25இலட்சம் வரை அதிகரித்திருக்கிறது.





