170 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் அழிப்பு
அங்கிருந்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் புத்தளம், லட்ரோவத்த வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன உலைக்கு இவை கொண்டு செல்லப்பட்டன.
நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 170 கிலோவிற்கும் ஹெரோயின் மற்றும் அபின் போதைப்பொருள் வனாத்தவில்லு பகுதியில்அமைந்துள்ள விசேட தகன உலைகளில் வைத்து அழிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கடற்படையினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது 106 கிலோ 248 கிராம் ஹெரோயின் மற்றும் 90.5 கிராம் அபின் என்பன கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த போதைப்பொருள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து மேற்படி போதைப்பொருள் தொகையை அழிப்பதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. அதற்கமைய 02-01-2026அன்று 6 மணியளவில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, நீதிவான் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் இவை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் புத்தளம், லட்ரோவத்த வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள நவீன தகன உலைக்கு இவை கொண்டு செல்லப்பட்டன.
காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த தகன நடவடிக்கை நண்பகல் அளவில் முழுமையாக நிறைவுற்றது. இது தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் பணியக மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மரத்ன கருத்துத் தெரிவிக்கையில், நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 170 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் நீதிவான் முன்னிலையில் வனாத்தவில்லுவில் அமைந்துள்ள விசேட தகன உலையில் வைத்து அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இருந்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் போதைப்பொருள் புத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. நண்பகல் வேளையில் இந்த முழுமையான போதைப்பொருள் தொகையும் தகனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு வெற்றிகரமாக அவை அழிக்கப்பட்டன என்றார்.





