176,527 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி
கலைப்பிரிவில் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் கலைப்பிரிவில் 133,686 பேர் தோற்றியிருந்த நிலையில், இம்முறை அத்தொகை 132,003 பேராகக் குறைந்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 1,76,527 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
தித்வா புயல் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகத் தாமதமாகி நடைபெற்ற இத்தேர்வில், ஒட்டுமொத்தமாக 62.64 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், வழமை போன்றே இம்முறையும் பெரும்பாலான பாடப்பிரிவுகளில் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 2024ஆம் (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 01-04-2026 அன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இப்பரீட்சையை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் காரணமாக நவம்பர் 27ஆம் திகதி முதல் ஒத்திவைக்கப்பட்ட பாடங்களுக்கான தேர்வுகள், பின்னர் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடத்தி முடிக்கப்பட்டன.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,362 பரீட்சை நிலையங்களில் இத்தேர்வுகள் இடம்பெற்றதோடு, இதற்கான செய்முறைப் பயிற்சிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தன.
பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க தகுதி
இப்பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் 336,697 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் பாடசாலை விண்ணப்பதாரிகளாக 245,888 பேரும், தனியார் விண்ணப்பதாரிகளாக 90,809 பேரும் உள்ளடங்குகின்றனர். எனினும், இவர்களில் மொத்தம் 281,810 பரீட்சார்த்திகளே பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் ஒட்டுமொத்தமாக 176,527 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இது பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 62.64 சதவீதமாகும். பாடசாலை விண்ணப்பதாரிகளில் 146,405 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுள்ளதோடு, இது சதவீத அடிப்படையில் 66.12 ஆகும். அத்துடன் தனியார் விண்ணப்பதாரிகளில் 30,122 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
8,300 மாணவர்கள் 3 'A' பெற்று சாதனை
இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 8,300 மாணவர்கள் 3 'A' என்ற விசேட சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். இதில் பாடசாலை விண்ணப்பதாரிகளாக 7,477 பேரும், தனியார் விண்ணப்பதாரிகளாக 823 பேரும் காணப்படுகின்றனர். பாடநெறி வாரியாகப் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றோர் வீதத்தை அவதானிக்கும் போது, உயிரியல் பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரிகளில் 59.56 சதவீதத்தினரும், ஒட்டுமொத்தமாக இப்பிரிவில் 58.43 சதவீதத்தினரும் தகுதி பெற்றுள்ளனர். பௌதிக விஞ்ஞானப் பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரிகள் 63.96 சதவீதமும், தனியார் விண்ணப்பதாரிகள் 61.59 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். வர்த்தகப் பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரிகள் 72.02 சதவீதமும், தனியார் விண்ணப்பதாரிகள் 66.29 சதவீதமும் தகுதியைப் பெற்றுள்ளனர். கலைப்பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரிகள் 67.57 சதவீதமும், தனியார் விண்ணப்பதாரிகள் 63.57 சதவீதமும் சித்தியடைந்துள்ளனர்.
மேலும், பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரிகள் 64.85 சதவீதமும், தனியார் விண்ணப்பதாரிகள் 62.65 சதவீதமும் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளனர். உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் பாடசாலை விண்ணப்பதாரிகள் 71.76 சதவீதமும், ஒட்டுமொத்தமாக இப்பிரிவில் 76.24 சதவீதமும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
இவை தவிர்ந்த ஏனைய பாடப்பிரிவுகளில் பாடசாலை விண்ணப்பதாரிகள் 55.39 சதவீதமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரிகள் 51.45 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். பல்கலைக்கழக அனுமதியைப் பொறுத்தவரை அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் (உயிரியல் பிரிவு தவிர) மாணவிகளே அதிகளவில் சித்தியடைந்து முன்னிலையில் உள்ளதோடு, உயிரியல் பிரிவில் மட்டும் ஆண் மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலிடத்தில் மேல் மாகாணம்
மாகாண மட்டத்திலான பல்கலைக்கழக அனுமதித் தகைமையைப் பெற்ற பாடசாலை விண்ணப்பதாரிகளின் அடிப்படையில் மேல் மாகாணம் 69.42 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வடமேல் மாகாணம் 68.48 சதவீதத்தையும், வட மாகாணம் 66.91 சதவீதத்தையும், கிழக்கு மாகாணம் 66.32 சதவீதத்தையும், தென் மாகாணம் 65.69 சதவீதத்தையும் பெற்றுள்ளன. அதேபோல் சபரகமுவ மாகாணம் 64.90 சதவீதத்தையும், ஊவா மாகாணம் 63.53 சதவீதத்தையும், மத்திய மாகாணம் 63.04 சதவீதத்தையும், வடமத்திய மாகாணம் 60.91 சதவீதத்தையும் பதிவு செய்துள்ளன.
கடந்த ஆண்டுகளை விட இம்முறை உயிரியல், பௌதிக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் முறைமைகள் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் அதிக கேள்வி காணப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பப் பாடத்தைத் தேர்வு செய்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட 5,905 பேரால் அதிகரித்துள்ளது.
எனினும் கலைப்பிரிவில் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் கலைப்பிரிவில் 133,686 பேர் தோற்றியிருந்த நிலையில், இம்முறை அத்தொகை 132,003 பேராகக் குறைந்துள்ளது.
111 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்
இதேவேளை, பரீட்சை விதிமுறைகளை மீறி கைபேசி மற்றும் இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தியமை, பார்த்தெழுதியமை, அனுமதிப்பத்திரத்தில் கையொப்பம் இடாதமை போன்ற காரணங்களால் 111 மாணவர்களின் பெறுபேறுகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறாத பாடசாலை விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை 19,301 ஆகும் (இது 8.7 சதவீதமாகும்). தனியார் விண்ணப்பதாரிகளில் 19.2 சதவீதத்தினர் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என்பதோடு, பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களில் 10.96 சதவீதமானோர் எந்தவொரு பாடத்திலும் சித்தியடையவில்லை.
திங்கள் முதல் பெறுபேறு மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
இவர்களுக்கான பெறுபேறு மீளாய்வு விண்ணப்பங்கள் இம்மாதம் 6ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இணையவழியில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த கால எல்லை எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது. அத்துடன் அடுத்த உயர்தரப் பரீட்சை (இவ்வாண்டுக்கானது) எதிர்வரும் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடத்தப்படவுள்ளதோடு, இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 24 வரை கோரப்பட்டுள்ளதால் மீளாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களும் பெறுபேறுகள் வரும் வரை தாமதிக்காமல் இம்முறையும் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என்றார்.





