450 மில்லியன் உதவிப் பொதி; கூட்டுக்குழு கையாளாது
350 மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான கடனுதவி என்பதோடு, 100 மில்லியன் டொலர் நன்கொடையாகும்.
தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து இலங்கையின் துரித மீட்சிக்காக இந்தியா இந்தியா 450 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப்பொதியொன்றை முன்மொழிந்துள்ளது. இந்த நிதியை இலங்கை - இந்திய கூட்டுக்குழுவால் கையாளுதல் தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறான கோரிக்கையொன்றை இந்தியா முன்வைக்கவுமில்லை. இதனை முற்று முழுதாக எமது அரசாங்கமே கையாளும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு 30-12-2025 அன்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போது '450 மில்லியன் டொலர் இந்திய உதவிப்பொதியை இலங்கை - இந்திய கூட்டுக்குழுவே கையாளும்' என வெளியாகியிருந்த செய்திகள் குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளிக்கையில், இந்தியா 450 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப்பொதியொன்றை முன்மொழிந்துள்ளது. அதில் 350 மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான கடனுதவி என்பதோடு, 100 மில்லியன் டொலர் நன்கொடையாகும். இந்த நிதி பயன்பாட்டை இலங்கை - இந்திய கூட்டு கண்காணிப்பின் கீழ் பயன்படுத்துவது குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் இருதரப்பிலும் முன்னெடுக்கப்படவில்லை.
கிடைக்கப் பெறும் நிதியுதவிகள் அரசாங்கத்தின் ஊடாகவும், அமைச்சுக்களின் ஊடாகவும் பயன்படுத்தப்படும். பெருந்தெருக்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவை தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும். இவை தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த செயற்பாடுகள் முற்று முழுதாக இலங்கை அரசாங்கத்தால் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது. இந்திய அரசாங்க தரப்பிலும் அவ்வாறானதொரு கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இலங்கையின் துரித மீட்சிக்காகவே இந்தியா இந்த உதவியை எமக்கு வழங்கியிருக்கிறது. அதற்கமைய துரிதமாக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு திட்டங்கள், இந்திய கடன் திட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய கொள்வனவுகள் மற்றும் திட்டங்களை விரைவுபடுத்த இந்தியாவிலிருந்து மனிதவளத்தை பயன்படுத்துதல் குறித்து இலங்கை - இந்திய கூட்டு இந்தக் கூட்டு குழு தீர்மானிக்கும் என செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





