மீண்டெழும் திறன் கொண்டதொரு நாடாக இலங்கையை அறிகிறோம்: அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
தற்போதைய நவீன சூழலில் ஜெட்ஸ்டார் சேவையானது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது.
வளமான கலாசாரம், இயல்பு மாறாத விருந்தோம்பல் மற்றும் மீண்டெழும் திறன் கொண்டதொரு நாடாகவே இலங்கையை அறிகின்றோம் என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வோர்த்; தெரிவித்துள்ளார்.
ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் ஹேலீஸ் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் தனது சேவைகளை ஆரம்பிபதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை என்பது இந்தியப் பெருங்கடலின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். வளமான கலாசாரம், அழகான இயற்கை நிலப்பரப்புகள், சிறந்த விருந்தோம்பல் மற்றும் மீண்டெழும் திறன் கொண்டதொரு நாடாக இலங்கையை நாங்கள் அறிகிறோம்.
அதேபோல, அவுஸ்திரேலியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் துடிப்பான இலங்கை புலம்பெயர் சமூகத்தினர் அவுஸ்ட்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர். இலட்சக்கணக்கான அவுஸ்ட்;ரேலியர்கள் இலங்கை உடனான தமது பரம்பரைத் தொடர்பைக் கொண்டுள்ளனர். ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் இந்த புதிய கொழும்பு – மெல்பேர்ண் நேரடி விமான சேவை, அந்த குடும்பங்களையும் சமூகங்களையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர உதவும்.
அவுஸ்திரேலியாவுடனான நேரடி வான்வழி இணைப்பு வெறும் ஒரு வர்த்தகச் சேவை என்பதையும் தாண்டி, இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்பும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். எமது மக்களுக்கு இடையிலான தொடர்புகள், சுற்றுலா, கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக பயணிப்போர் மற்றும் குடும்ப மீள்இணைவு உள்ளிட்ட இரு நாட்டு மக்கள் மத்தியிலான ஆழமான தனிப்பட்ட பிணைப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் பலப்படுத்தவும் இந்த சேவை உதவியாக இருக்கும்.
இரண்டாம் உலகப் போரின் போது (1943 - 1945) பேர்த் மற்றும் கொக்கல ஏரிக்கு இடையே இயக்கப்பட்ட புகழ்பெற்ற 'டபுள் சன்ரைஸ்' விமான சேவையை இந்த தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன். அக்காலகட்டத்தில் 30 மணிநேரத்துக்கும் அதிகமான பயண நேரத்தைக் கொண்ட அந்த விமானங்கள், அஞ்சல் மற்றும் வர்த்தகத்துடன் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் சுமந்து வந்தன.
அதேபோல, தற்போதைய நவீன சூழலில் ஜெட்ஸ்டார் சேவையானது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று தொடர்பில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது. இந்த இணைப்பு சுற்றுலாத்துறை, ஏற்றுமதியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், கல்விப் பரிமாற்றங்களை ஊக்குவித்து இருதரப்பு கூட்டாண்மையை மேலும் பலப்படுத்தும்.
அடுத்த ஆண்டு இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 80ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ள நிலையில், பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவை நல்ல பங்காளியாகவும் முன்னிலைப்படுத்த இந்த இணைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.





