விண்வெளியை போர்க்களமாக மாற்ற முடியாது - ஐ.நாவுக்கான நிரந்தரவதிவிடப்பிரதிநிதி
விண்வெளி கழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
விண்வெளி மனித இனத்தின் பொதுச்சொத்து என்பதுடன், அது அனைத்து நாடுகளினதும் நலனுக்காக அமைதியான நோக்கங்களுக்காக மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். விண்வெளியை போர்க்களமாக மாற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் இலங்கை நிராகரிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் தசநாயக்க, வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், விண்வெளி நடவடிக்கைகள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் பிரகடனம் மற்றும் விண்வெளி ஒப்பந்தத்தின் விதிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்;. விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்துவதைத் தடுப்பதற்கு தன்னார்வ அடிப்படையிலான வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் இடைக்கால நடவடிக்கைகளாக அமையலாம்.
அவை சட்டரீதியாக கட்டுப்படுத்தக்கூடியதும், அனைத்து தரப்பிலும் சரிபார்க்கக்கூடியதுமான விரிவான ஒப்பந்தத்துக்கு மாற்றாக அமைய முடியாது. மேலும், பூமிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில் அதிகரித்து வரும் விண்வெளிக் கழிவுகளால் ஏற்படும் பாரிய அச்சுறுத்தல் குறித்தும் இலங்கை கவனம் செலுத்தியுள்ளது.
விண்வெளி தொழில்நுட்பங்களை நேரடியாகக் கொண்டிருக்காத போதிலும், உலகளாவிய விண்வெளி உட்கட்டமைப்பில் தங்கியுள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே விண்வெளிக் கழிவுகளால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.
எனவே, விண்வெளி கழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை, விண்வெளி அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட தேவைகளுக்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் விண்வெளித் தொழில்நுட்பங்களை அணுகுவதற்கு தடையாக அமைவதற்கு பாகுபாடான கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கக்கூடாதெனக் கோருகின்றேன் என்றார்.





