சுரேஷ் சாலேவை 90நாட்களுக்கு தடுத்துவைப்பதற்கு உத்தரவு
சுரேஷ் சலேயை 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்க வேண்டாம் எனவும், அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரி அவரது மனைவி மனோரி சலே ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒத்தாசை வழங்கி, சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதில் கவனத்திற் கொண்ட முக்கிய விடயம் யாதெனில், சுரேஷ் சலே தடுப்புக் காவலில் இருந்த 90 நாட்களில் 78 நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையாகும்.
ஜனாதிபதியினால் முன்னர் வழங்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் முன்னேற்றம் குறித்த அறிக்கையொன்றை அவர் கோரியிருந்த நிலையில், வழங்கப்பட்ட அறிக்கையில் சுரேஷ் சலே குறித்த காலப்பகுதியில் அதிக நாட்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருக்கவில்லை எனவும்,கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விசாரணை நடவடிக்கைகளைச் சான்றாதாரங்களுடன் திறம்பட முன்னெடுக்க முடியாமல் போனதால், மீண்டும் தடுப்புக் காவல் உத்தரவை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டு இரண்டு சந்தர்ப்பங்களில் 90 நாட்கள் தடுத்து வைப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
சுரேஷ் சலேயை 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்க வேண்டாம் எனவும், அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரி அவரது மனைவி மனோரி சலே ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
தற்போது சலேயைத் தடுத்து வைப்பதற்கு எதிராகச் சுரேஷ் சலேயினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவொன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றது.





