புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு அவசியம்; எதிர்க்கட்சித் தலைவர்
பேரிடர்களுக்கு வெறும் பதிலளிக்கும் நடவடிக்கைகளுடன் நின்றுவிடாமல், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைப் முன்மாதிரியாகக் கொண்டு புதிய நிறுவனங்கள் மற்றும் நவீன வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய பேரிடர் மேலாண்மை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
எல் நினோ மற்றும் லாநினோ காலநிலை மாற்றங்கள் காரணமாக எழும் தீவிர இயற்கை அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு, நாடு என்ற ரீதியில் உரிய முன்ஆயத்த நடவடிக்கைகளுடன் கூடிய புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
தல்பே பத்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஏழு ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் ஈரான் போர் வரையிலான ஐந்து பாரிய பேரழிவுகளை நாடு சந்தித்துள்ளது. காலநிலை மாற்ற நிபுணர்களின் கூற்றுப்படி ஆறாவது சவாலாக எல் நினோ மற்றும் லாநினோ காலநிலை மாற்றம் அமையக்கூடும்.
இதன் காரணமாக குறுகிய காலத்தில் கடுமையான வறட்சியும் அதனைத் தொடர்ந்து கடுமையான மழையும் பெய்யக்கூடும் என்பதால், பிரான்ஸ் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளைப் போல பேரழிவுகள் ஏற்படுவதை தடுக்க முன் ஆயத்தம் அவசியம். இது குறித்து நானும் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரமவும் இணைத் தலைமை தாங்கும் பாராளுமன்றக் குழு ஆராய்ந்து வருகிறது.
மேலும், பேரிடர்களுக்கு வெறும் பதிலளிக்கும் நடவடிக்கைகளுடன் நின்றுவிடாமல், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைப் முன்மாதிரியாகக் கொண்டு புதிய நிறுவனங்கள் மற்றும் நவீன வேலைத்திட்டங்களை உள்ளடக்கிய பேரிடர் மேலாண்மை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
40,000 பேரின் உயிர்களைப் பறித்த 2004 சுனாமி பேரழிவிற்குப் பின்னரும் கூட நவீன பேரிடர் முகாமைத்துவ திட்டத்தை உருவாக்க முடியாமல் போயுள்ளது. அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் இணைந்து பேரிடர்களைத் தாங்கக்கூடிய நாட்டை உருவாக்க முன்வர வேண்டும்.
பொருளாதார ரீதியில் பலவீனமடைந்துள்ள நாட்டிற்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகள் அழுத்தம் கொடுக்க முயல்வதால், வெளிநாட்டுத் தாக்கங்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.





