22ஆவது திருத்தத்துக்கு இந்தியாவின் எதிர்ப்பும் வெகுவிரைவில் எழும் - லங்கா சமசமாஜக் கட்சி
அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது ஒரு திட்டமிட்ட ஏமாற்று வேலை என்பது மிக தெளிவாகப் புலனாகின்றது.
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது உண்மையிலேயே நல்எண்ணத்துடன் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடாக லங்கா சமசமாஜக் கட்சி கருதவில்லை. அரசினால் முன்வைக்கப்ட்ட 22ஆவது திருத்தத்துக்கு இந்தியாவின் எதிர்ப்பும் வெகுவிரைவில் எழும் என அக்கட்சியின் அரசியல் குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் சந்தன ரணசிங்க குற்றம் சாட்டினார்.
முன்வைக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும தெரிவிக்கையில்: கடந்த கால அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்ட 19 மற்றும் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தங்களைப் போன்றே இதுவும் ஒரு ஏமாற்று நடவடிக்கையாகவே அமைகின்றது. இக்காரணத்தினாலேயே சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி மக்களின் விருப்பத்தை அறிந்துகொள்வதை அரசாங்கம் தவிர்க்க முயல்கின்றது.
நாட்டில் உள்ள அனைத்து துறைசார் அறிஞர்களும் பிராமாணிக கல்வியாளர்களும் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் கூட இத்தகைய திருத்தத்தை மேற்கொள்ளக் கூடாது என்றே தொடர்ச்சியாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுவதைப் போன்று இந்த திருத்தத்தின் மூலம் நீதிமன்ற வழக்குகள் விரைவுபடுத்தப்படவோ அல்லது மக்களுக்கு ஏதேனும் குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்கப்பெறவோ போவதில்லை.
தற்போதைய தலைமை நீதிபதியின் ஓய்வுபெறும் காலமும் சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்துள்ள பின்னணியில், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது ஒரு திட்டமிட்ட ஏமாற்று வேலை என்பது மிக தெளிவாகப் புலனாகின்றது.
அதேவேளை, இத்திருத்ததுக்கு எதிராக இந்தியாவின் எதிர்ப்பும் வெகுவிரைவில் எழும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அத்தகைய சூழ்நிலை உருவாகும் போது அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.





