இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து
இச்சம்பவத்தை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஓடுதள நடவடிக்கைகள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
இரத்மலானை விமான நிலையத்தில் தனியாரைப் பயிற்றுவிக்கும் பயிற்சி விமானம் ஒன்று திடீரெனக் தரையிறங்கியதால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
25-08-2026அன்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் விமானி அதிர்ஷ்டவசமாகக் காயங்களின்றி தப்பியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இரத்மலானை விமான நிலையத்தை தளமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் விமானப் பயிற்சிப் பள்ளிக்குச் சொந்தமான 'செஸ்னா 152' (Cessna 152) ரகப் பயிற்சி விமானம் ஒன்று, வழக்கமான பயிற்சியின் பின்னர் தரையிறங்க முயன்ற போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
'4R-DRA' என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம், தரையிறங்கிய வேகத்தில் ஓடுதளத்தில் மோதியதில் கணிசமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும், விமானத்தில் பயணித்த பயிற்சி விமானி எவ்வித ஆபத்துமின்றி காயங்களின்றி தப்பியுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஓடுதள நடவடிக்கைகள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. விபத்துக்குள்ளான விமானத்தை ஓடுதளத்திலிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட பகுதியைச் சீரமைத்து மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் விபத்துக்கான காரணம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.





