ஊழல் எதிர்ப்பு சட்டம் மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகிறது - பெப்ரல்
ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டத்தின் சில ஏற்பாடுகளிலிருந்து புலப்படுவது யாதெனில், ஒரு நபரைச் சுற்றி அதிக அதிகாரம் மையம் கொள்ளும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுகிறது என்பதாகும்.
ஊழல் எதிர்ப்பு புதிய வரைவின் மூலம் தகவல்களைப் பெறுவதற்கும் அவ்வாறான தகவல்களைப் பயன்படுத்துவதற்கும் மக்களுக்கு உள்ள உரிமையைக் கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதனால் 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் மூலம் அடைந்த வெற்றிகளை, கொண்டுவரப்படும் எந்தவொரு திருத்தத்தின் மூலமும் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு உள்ள உரிமையைப் பலவீனப்படுத்தக் கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டமானது வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தனித்துவமான சட்ட ஏற்பாடு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைப் பொதுமக்கள் பகிரங்கமாகப் பயன்படுத்துவதற்குச் சந்தர்ப்பம் அளித்தமையானது இலங்கையின் ஊழல் எதிர்ப்புப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், பொதுமக்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தும் நபர்கள் பொதுமக்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோட்பாடு நடைமுறைப் பயன்பாட்டிற்கு வந்த ஒரு சந்தர்ப்பமாகவும் இதனைக் குறிப்பிடலாம்.
இவ்வாறானதொரு முற்போக்கான சூழலில், பொதுமக்கள் தகவல்களைப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், 2026 ஜூலை 24 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்ட வரைவின் மூலம், அத்தகவல்களைச் சட்டப்பூர்வமான காரியத்திற்குத் தவிர வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றவியல் குற்றமாகும் என வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளது. ஊழலைக் குறைப்பதில் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்குவது மட்டுமன்றி, அத்தகவல்கள் சமூகத்தில் வெளிச்சத்திற்கு வந்துவிடுமோ என்ற பயமும் நேரடியாகவே செல்வாக்குச் செலுத்துகின்றது.
சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சிறந்த முறையில் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டுமெனில், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் தொடர்புடைய நபர்களின் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களில் உள்ள முரண்பாடுகளை அடையாளம் காண்பதற்கும், சில நபர்களின் சொத்துக்கள் அவர்களின் சட்டப்பூர்வ வருமானத்தின் மூலம் தெளிவுபடுத்த முடியுமா என்று கேள்வி எழுப்புவதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்க வேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 88 ஆம் பிரிவுக்குப் பின்னர் ஒரு புதிய உப பிரிவைச் சேர்ப்பதற்கு இந்த வரைவு மூலம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதில், வேறு யாதேனுமொரு நபரின் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனத்தின் திருத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு நபர், 86 ஆம் பிரிவின் கீழ் அப் பிரகடனத்தை யாதேனுமொரு உத்தியோகத்தருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ சமர்ப்பிப்பதைத் தவிர, வேறு யாதேனுமொரு காரியத்திற்கு அப் பிரகடனத்தைப் பயன்படுத்தக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் மூலம் தகவல்களைப் பெறுவதையும் பகிர்வதையும் கட்டுப்படுத்துவது, ஒரு சமூகமாக நாம் அடைந்த வெற்றியைப் பின்னோக்கி நகர்த்துவதாகும் என நாம் நம்புகிறோம். மிகவும் கவனத்திற்குரிய விடயம் யாதெனில், சட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களைப் பொதுமக்கள் பயன்படுத்துவதை இந்த புதிய வரைவு குற்றவியல் குற்றமாக மாற்றுவதாகும். அதேபோன்று, "திருத்தப்பட்ட பிரதிகள்" என்பதற்கு தெளிவான வரைவிலக்கணம் இல்லாத நிலையில், தேவைப்பட்டால் தனிப்பட்ட தனியுரிமை பாதிப்படைவதாகக் கூறி தகவல்களை மறைக்க முடியும் என சமூகம் எழுப்பும் வாதத்தையும் இலகுவில் நிராகரிக்க முடியாது.
யாதேனுமொரு நபரின் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சிதைத்து, அந்நபரைச் சமூகத்தில் அவமதிப்புக்கு உள்ளாக்கும் நோக்கில் திட்டமிட்டுச் செயற்பட்டால், அது தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும், பொதுச் சொத்துக்கள் மற்றும் பொதுமக்கள் சார்ந்த அதிகாரங்களைப் பயன்படுத்தும் நபர்கள் அதன் மூலம் சட்டவிரோத இலாபத்தைப் பெற்றுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்கு மக்களுக்கு உள்ள உரிமையும், மக்களை விழிப்புணர்வுடுத்துவதற்கு வெளித்தரப்பினருக்கு உள்ள உரிமையும் கட்டுப்படுத்தப்படக் கூடாது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80 (பி) பிரிவின்படி, அரசாங்கம் அல்லது அரச கூட்டுத்தாபனம் ஒன்றின் மூலம் 25வீதம் இற்கு குறையாத பங்குகளைக் வைத்துள்ள நிறுவனங்களின் தலைவர்கள் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற எல்லைக் கட்டுப்பாடு 50வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்க்கும்போது, 49.9வீதம் வரை பங்குகளைக் கொண்டுள்ள அரச தலைவர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களை வழங்க வேண்டிய தேவை எழாது. இது இலஞ்ச ஊழலை ஒழித்து, நேர்மையானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்குக் கொண்டுள்ள அடிப்படை நோக்கத்திற்கு முரணான ஒரு பிரிவாகும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டத்தின் சில ஏற்பாடுகளிலிருந்து புலப்படுவது யாதெனில், ஒரு நபரைச் சுற்றி அதிக அதிகாரம் மையம் கொள்ளும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுகிறது என்பதாகும். தற்போதைய இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறித்து எங்களுக்கு நன்மதிப்பு உள்ளபோதிலும், ஒரு நபரைச் சுற்றி அதிக அதிகாரம் மையம் கொள்வது ஒரு நல்ல போக்கல்ல என்பது எமது நம்பிக்கையாகும். குறிப்பாக, ஒரு சுயாதீன ஆணைக்குழுவில் அதிகாரம் ஆணைக்குழுவிற்கோ அல்லது ஒரு முறையான கட்டமைப்புக்கோ உரித்தானதாக இருக்க வேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகும் என்றார்.





