எல் நினோ தாக்கத்திற்கு முன்ஆயத்த திட்டம்
இறக்குமதியாளர்களிடம் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு அளவுகள் குறித்து வினவுதலும், இலங்கை சுங்கத்தின் தரவுகளை பரிசீலித்தலும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
உலகளாவிய எல் நினோ சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து முன்ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு, வர்த்தக,வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் வர்த்தக அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
எல் நினோ நிலைமையின் தாக்கம் நமது நாட்டிற்கு குறைவாக இருந்தாலும்,உலகளவில் ஏனைய நாடுகளுக்கு ஏற்படும் தாக்கம் காரணமாக நமது நாட்டின் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்திற்கு மறைமுக தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அதற்கு முன்ஆயத்தமாக அத்தியாவசிய இறக்குமதி உணவுப் பொருட்களின் பாதுகாப்பான இருப்பைப் பேணுவது அவசியம் என அமைச்சர் வசந்த சமரசிங்க இங்கு சுட்டிக்காட்டினார்.
இதற்காக இறக்குமதியாளர்களிடம் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு அளவுகள் குறித்து வினவுதலும், இலங்கை சுங்கத்தின் தரவுகளை பரிசீலித்தலும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களிடையே வீண் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும், பொறுப்புணர்வுடன் இதனை ஒரு தேசிய பிரச்சினையாக கருதி செயல்படுமாறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்களிடம் அமைச்சர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
பருப்பு,உருளைக்கிழங்கு, வெங்காயம், கருவாடு மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை சந்தையில் தட்டுப்பாடின்றி பேணுதல் மற்றும் அவற்றின் விலைகளை ஸ்திரமாக வைத்திருப்பது குறித்து இறக்குமதியாளர்களுடன் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாடுகள் அல்லது விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக,சந்தை நிலவரம் மற்றும் வானிலை மாற்றங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கு இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.





