கெஹெல் பத்தரபத்மேவின் தொலைபேசியில் புகைப்படங்கள், இலக்கங்கள் கண்டுபிடிப்பு
தற்போது அவரது தடுப்புகக்காவல் காலம் நிறைவடைந்துள்ளமையால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் மன்றில் கோரியிருந்தனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோரலகமகே மனுதின பத்மசிரிபேரேரா எனும் கெஹெல் பத்தரபத்மேவின் கையடக்க தொலைப்பேசியிலிருந்து 13 சிறைச்சாலை உத்தியோகத்தகர்களின் தொலைப்பேசி இலக்கங்களும் மோடல் அழகிகள் உட்பட 7 அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் காணப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்தோனேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு நிதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்பாக 25-08-2026 அன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், சந்தேகநபருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கணேமுல்ல சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் குறித்த நபர் 18 ஆவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதியன்று கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமையால் அன்றைய தினம் சந்தேகநபரை மன்றில் முன்னிலையப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
கடந்த வருடம் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபர் 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதியன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதோடு, தொடர்ந்து தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். தற்போது அவரது தடுப்புகக்காவல் காலம் நிறைவடைந்துள்ளமையால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் மன்றில் கோரியிருந்தனர்.
தொடர்ந்து விடயங்களை முன்வைத்த விசாரணை அதிகாரிகள், கனம் நீதிவான் அவர்களே, சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் இன்றைய தினம் வரை தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டது. சந்தேகநபரிடமிருந்த கையடக்க தொலைப்பேசியை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்ற போதிலும் அதன் தரவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. எனினும், அந்தத் தரவுகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தொழில்நுட்பப் பிரிவினர் மீளப் பெற்றுக்கொண்டனர்.





