குற்றச்சாட்டுக்களை மறுக்கும் முன்னாள் சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர்
அரசாங்கத்தால் இதுவரை விசாரணைகளை நடத்தவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எட்டாவது மற்றும் ஒன்பதாவது பாராளுமன்றங்களின் எரிபொருள் மற்றும் வாகன பயன்பாடு குறித்த சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆகியோர் முற்றாக நிராகரித்துள்ளனர்.
இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர்கள் எந்தவொரு விசாரணைக்கும் பதிலளிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, குறித்த குற்றச்சாட்டுகள் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே எழுந்தபோதிலும் அரசாங்கத்தால் இதுவரை விசாரணைகளை நடத்தவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சபாநாயகருக்கு வழங்கப்பட்ட ஐந்து வாகனங்கள் மற்றும் தோட்டாக்கள் ஊடுருவாத பாதுகாப்பு வாகனம் ஆகியவற்றின் எரிபொருள் பயன்பாடுகளை தனித்தனியாகக் குறிப்பிடாமல் அனைத்து வாகனங்களின் பயன்பாட்டையும் ஒன்றாகச் சேர்த்தே கணக்காய்வு அறிக்கையில் காட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பொலிஸ் பாதுகாப்பு வாகனத்திற்கான எரிபொருளும் பாராளுமன்றத்தின் மூலமே பெறப்பட்டதாகவும் தம்மால் முறைகேடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், அனைத்துச் செலவுகளும் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டதாகவும் பாராளுமன்ற அதிகாரிகள் உரிய நடைமுறைகளையே பின்பற்றியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்த கணக்காய்வு அறிக்கையின் கண்டுபிடிப்புகளைத் தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனக்குறிப்பிட்ட அவர் தம்மை மற்றும் முன்னாள் சபாநாயகரை இலக்கு வைத்து சமூகத்தில் ஒரு தவறான கருத்தாக்கத்தை உருவாக்கும் முயற்சியே இதுவெனக்குற்றம் சுமத்தினார்.





