உலகளாவிய முதலீட்டுக்கு வடக்கை திறந்து விட வேண்டும் - மனோ எம்.பி
வடக்கின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சி என்பதை ஆளும் அரசாங்கம் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகிய இரண்டையும் விரைவாக அபிவிருத்தி செய்து, உலகளாவிய வர்த்தக மற்றும் முதலீட்டுக்கு வட இலங்கையை உடனடியாக திறந்து விடுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சி என்பதை ஆளும் அரசாங்கம் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில், வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக இன்று நம்மிடம் உள்ள மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி விமான நிலையமும், காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும். பலாலி சர்வதேச விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகிய இரண்டின் வளர்ச்சிக்கும் தேவையான நிதியுதவிகளை வழங்க அண்டை நாடான இந்தியா முழுமையாகத் தயாராக இருக்கிறது. இந்தச் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, உலகப் பொருளாதார அபிவிருத்தியுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு புதிய வர்த்தக, முதலீட்டு மற்றும் பொருளாதார மையமாக வட மாகாணத்தை மாற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த வாய்ப்புகளுக்கு வட மாகாணத்தின் அரசாங்க பொறுப்பாளராகப் பணியாற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க எவ்வித முட்டுக் கட்டைகளையும் போடக் கூடாது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பலாலி மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு உட்கட்டமைப்புத் திட்டங்களையும், பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த பலனைத் தராத மத்தல விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய தோல்வியடைந்த திட்டங்களுடன் மறைமுகமாக ஒப்பிடுவது முற்றிலும் அறிவீனமான செயலாகும். பலாலியும் காங்கேசன்துறையும் மத்தல மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களை விடவும் மிகவும் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டமைப்புகள் என்பதை; பிமல் ரத்நாயக்க முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இனவாதத்துக்கு எதிரானவர் என உங்களை நீங்களே கூறிக்கொள்கிறீர்கள். ஆனால், வடக்கு பிராந்தியம் எப்போதும் தலைநகர் கொழும்பையே சார்ந்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மை உங்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் இரட்டை வேடச் செயல்பாடாகும். எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எனது தெளிவான செய்தி இதுதான். இந்தியா நிதியுதவி வழங்கத் தயாராக இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்திப் பணிகளை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக முன்னெடுங்கள்.
வட இலங்கையை எப்போதும் கொழும்பைச் சார்ந்திருக்கும் ஒரு சாதாரண பிராந்தியமாக மாத்திரம் கட்டுப்படுத்தாமல், உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு புதிய பொருளாதார மையமாக மாற்றியமையுங்கள். அத்துடன், உலகம் முழுவதிலும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் தாயகமான வடக்குக்கு நேரடியாகப் பயணிப்பதற்கான போக்குவரத்து வாய்ப்புகளை விரைவாக ஏற்படுத்துங்கள். வடக்கின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கையின் வளர்ச்சி என்பதை ஆளும் அரசாங்கம் மறந்துவிடக் கூடாது என்றுள்ளது.





