மன்னார் முதல் பாணந்துறை வரையில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் - பேராசிரியர் அதுல
மன்னார் முதல் பாணதுறை வரையிலான பகுதியில் இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மன்னார் படுகையிலிருந்து பாணந்துறை வரையிலான இலங்கையின் மேற்கு மற்றும் வடமேற்கு கடற்பகுதியில் பெருமளவிலான இயற்கை எரிவாயு மற்றும் உயர்தர மசகு எண்ணெய் படிவுகள் காணப்படுவதாகப் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வுகள் மற்றும் அறிவியல் தரவுகளின் அடிப்படையில், மன்னார் முதல் பாணதுறை வரையிலான பகுதியில் இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த இயற்கை வளங்களைச் சரியாகப் பயன்படுத்தி அகழ்ந்தெடுப்பதன் மூலம் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மிகப்பாரிய தீர்வைக் காண முடிவதோடு, எதிர்கால ஆற்றல் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும்.
முறையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தெளிவான அரசாங்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது ஆகியவை இத்திட்டத்திற்கு மிக முக்கியமானவை. எனவே, அரசியல் தாமதங்கள் இன்றி சரியான திட்டமிடலுடன் இக்கடல்சார் வளங்களை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.





