கிரிக்கெட் வீரர்களிடம் தனிநபர் வருமான வரி அறவிடும் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
வழக்கு 31-08-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர், வீராங்கனைகளிடம் இருந்து தனிநபர் வருமான வரி அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணிபாளர் நாயகம் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் மனு வொன்றை பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, இலங்கை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தலைவர்களான சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா மற்றும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் இணைந்து தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரொஹான்த அபேசூரிய தலைமையில், நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகிய இருவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் மேற்படி வழக்கு 31-08-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பை அறிவித்ததை தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹான்த அபேசூரிய தெரிவிக்கையில், மனுதாரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதி அவர்களிடம் தனிநபர் வருமான வரியை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணிபாளர் நாயகம் எடுத்த தீர்மானம் சட்டப்படி செல்லுபடியற்றதாக்கி ரிட் மனு பிறப்பிக்கப்படும்.
இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பணிபாளர் நாயகத்தால் எதிர்காலத்தில் எடுகப்படக்கூடிய புதிய தீர்மானங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
இம்மனுக்கள் இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், மனுதாரர்களான கிரிக்கெட் வீரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிஷான் பிரேமரத்ன விடயங்களை முன்வைக்கையில், இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் அல்ல என வலியுறுத்தியிருந்தார்.
எமது சேவைபெறுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாத்திரமே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் அல்லது ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றுக்கான உரிமை இல்லை என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்த அதேவேளை, உள்நாட்டு வருமானவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜயசிங்க, மனுதாரர்களிடம் வரி அறவிடுவதற்கு பணிபாளர் நாயகத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டப்பூர்வமானது எனக் குறிப்பிட்டிருந்தார். இரு தரப்பினரதும் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த பின்னர் நீதிபதிகள் அமர்வு நேற்றைய தினம் இந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.





