இலங்கை சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்: 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் வருகை
இதன் மூலம் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை தொடர்ச்சியாக நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்யும் வகையில், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளடங்கிய 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.
இதன்போது துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதிமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டப்.டப்.எஸ். மங்கல ஆகியோரும் கலந்துகொண்டனர். இச்சுற்றுலாப் பயணிகள் எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதுடன், சீகிரியா மற்றும் அனுராதபுரம் போன்ற இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கைக்கு ஜப்பான் ஒரு முக்கியமான சுற்றுலாச் சந்தையாகும். அங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, நாட்டின் சுற்றுலா வருவாயை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச சுற்றுலா சந்தையில் இலங்கையின் பிம்பத்தை மேலும் வலுப்படுத்தவும் உதவும். அத்துடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களுக்கு இவர்களது வருகை ஒரு நல்ல போக்கைக் காட்டுவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுக்கும் வலுசேர்க்கிறது.
இச்சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை கொழும்பு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ஹோட்டல் நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்நிறுவனத்தின் லிட்டில் ஜப்பான் (Little Japan) என்ற கலாச்சார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் வருகை தந்துள்ள இக்குழுவினருக்கு இலங்கையின் பெருமையை வெளிப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை தொடர்ச்சியாக நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது பிரதிமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு கருத்து தெரிவிக்கையில்: ஜப்பான் அரசாங்கம் தற்போது இலங்கை அரசாங்கத்துடன் மிகச் சிறந்த உறவைப் பேணி வருகிறது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமானநிலையத்தின் இரண்டாவது முனைய கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க ஜப்பான் அரசு முன்வந்துள்ள நிலையில், இதுபோன்ற சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.
மேலும், கொழும்பு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ஹோட்டல் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ருவன் பெரேரா தெரிவிக்கையில்: சுற்றுலாத்துறை மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு தனியார் துறை முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இந்த கலாச்சாரப் பரிமாற்றம் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்காக இரு நாடுகளையும் இணைக்கும் ஒரு உண்மையான பாலமாக அமையும்.





