மனித புதைகுழிகள் தொடர்பான சுயாதீன விசாரணை அவசியம் - அனா லொரெனா
வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்காகப் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றிணைந்து தொடர்ச்சியாகப் போராடுவது நெகிழ்வைத் தருவதுடன், நீதிக்கான இந்தப் போராட்டம் முக்கியமானதுமாகும்.
வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கான முறையானதும், நம்பகமானதுமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அரச அதிகாரிகள் அவற்றை மறுதலிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேரஸ், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளின் நீட்சியாக, அதுபற்றிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் 30-08-2026 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உரையின் தொடக்கத்தில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வுக்குத் தன்னை சிறப்பு விருந்தினராக அழைத்தமைக்கான வடக்கு. கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த அவர். இந்த நிகழ்வு பாதிக்கப்பட்டோருடன் தம்மை மேலும் நெருக்கமாக்கும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை இந்த சர்வதேச மாநாடு வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், ஏற்கனவே இடம்பெற்ற மிகமோசமான மீறல்களுக்கான தீர்வை எட்டுவதற்குரிய அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மீண்டெழும் ஆற்றலே உண்மை மற்றும் நீதிக்கான இந்தத் தொடர் பயணத்துக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"1980 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட உயர்மட்டக் கட்டமைப்புக்களில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு முக்கியமானதாகும். உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல்களை முடிவுக்குக்கொண்டுவருவதே இப்பணிக்குழுவின் பிரதான நோக்கமாகும். வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பது மனிதகுலத்துக்கு எதிராக நிகழ்த்தப்படக்கூடிய மிகமோசமான குற்றங்களில் ஒன்றாகும்.
அதற்கமைய வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதியை அடைந்துகொள்வதையும், பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான சாட்சியங்களை சேகரிப்பதையும் முன்னிறுத்திப் பணியாற்றி வருகின்றோம். அந்தவகையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான 66,626 வழக்கு விபரங்கள் சுமார் 115 நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிவருகின்றன" என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அத்தோடு துரதிஸ்டவசமாக இன்றளவிலே உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் மிகமுக்கிய பிரச்சினையாகக் காணப்படுவதாகவும், வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கான முறையானதும், நம்பகமானதுமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அரச அதிகாரிகள் அவற்றை மறுதலிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அனா லொரெனா தெரிவித்தார். அங்க அவர் மேலும் உரையாற்றியதாவது:
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்கள், இன-மத சிறுபான்மையினர், மீறல்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் எனப் பலரும் கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களும், அவற்றினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களாவர்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றிலிருந்து இப்போதுவரை நாளாந்தம் அனுபவித்துவரும் துயரத்தை நாமறிவோம். இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட தாய்மாருடனான எமது உடன்நிற்பை வெளிப்படுத்துகின்றோம்.
இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பான முறையானதொரு பதிவு இல்லை. கடந்த காலங்களில் எமது பணிக்குழுவுக்கு சுமார் 12,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் பெரும்பான்மையானவை 1980 களின் பிற்பகுதியிலும், 1990 களின் முற்பகுதியிலும் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) ஆயதக்கிளர்ச்சியின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பானவை ஆகும். அதேபோன்று இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான ஆயுதப்போராட்டத்தின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களும் இதில் உள்ளடங்குகின்றன.
உண்மை, நீதி மற்றும் மீள்நிகழாமையை நோக்கிய பயணத்தில் பாதிக்கப்பட்ட தாய்மார் பல்வேறு மட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். நீதிகோரி நீண்டகாலமாகப் போராடிய தாய்மாரில் பலர் பதில் கிட்டாமலேயே உயிரிழந்துவிட்டனர். இனிவருங்காலங்களில் பதில் கிட்டாமல் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் உயிரிழக்கக்கூடாது.
அதுமாத்திரமன்றி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பதால், அவர்களில் தங்கிவாழ்ந்த மற்றும் தங்கிவாழக்கூடிய நிலையில் இருந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையிலும் நீதிகோரிய போராட்டங்கள் பல்வேறு வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்காகப் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றிணைந்து தொடர்ச்சியாகப் போராடுவது நெகிழ்வைத் தருவதுடன், நீதிக்கான இந்தப் போராட்டம் முக்கியமானதுமாகும்.
சர்வதேச சமூகமும் இதனையே வலியுறுத்துகின்றது. தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளின் நீட்சியாக, அதுபற்றிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவேண்டும். இச்செயன்முறைக்கு அவசியமான தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு எமது பணிக்குழு தயாராக இருக்கின்றது. இந்தத் தாய்மாரின் குரல்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்துக்குக் கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டும்.





