வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான முதலாவது சர்வதேச மாநாட்டில் பெருந்திரளானோர் பங்கேற்பு
'வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது?' என்ற கேள்வி இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு 30-08-2026 அன்று யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் முதற்தடவையாக நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தமது உறவுகள் எங்கே என்ற கேள்விக்குப் பதில் கிட்டும் வரை தமது போராட்டம் தொடரும் என உறுதிபட அறிவித்தனர்.
வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பன முன்னெடுக்கப்படும்.
அதற்கமைய இவ்வருடமும் நேற்றைய தினம் (30) வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் 'நீதிக்கான நீள்பயணம்' எனும் மகுடத்தில் நடைபெற்ற சர்வதே மாநாடு காலை 9.15 மணியளவில் யாழ்ப்பாணம், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலயத்துக்கு முன்பாக பேரணியுடன் ஆரம்பமானது.
இப்பேரணியானது 'வெள்ளை வான்' கடத்தல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்களைப் பிரதிபலிக்கும் வகையில் அத்தகைய வான் ஒன்றில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட ஊர்தியில் பாதிக்கப்பட்ட தாயொருவரால் ஈகைச்சுடரேற்றப்பட்டு ஆரம்பமானது.
பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் கறுப்பு நிற உடையணிந்து, கையில் தீப்பந்தம் ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.
அவர்கள் காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே?, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே?, ஓ.எம்.பி, இழப்பீட்டுக்கான அலுவலகம் வேண்டாம், மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம், சர்வதேச விசாரணை வேண்டும், செம்மணி மனிதப்புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டும் என்பன உள்ளடங்கலாக யுத்தகாலத்தில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் மற்றும் தற்போது இடம்பெற்றுவரும் ஒடுக்குமுறைகளுக்கு நீதிகோரி கோங்களை எழுப்பியவாறும், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும், கண்ணீர் சிந்தியவாறும் வைத்தியசாலை வீதி ஊடாக யாழ் தந்தை செல்வநாயகம் அரங்கை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர், சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், துரைராசா ரவிகரன், சிறிநேசன் உள்ளிட்டோர், சிவில் சமூகப்பிரதிநிதிகளான வேலன் சுவாமிகள், ரூக்கி பெர்னான்டோ, த்யாகி ருவன்பத்திரன, வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாகப் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டிருந்தனர்.
அம்மாநாட்டில் உரையாற்றிய வடக்கு. கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சனி யோகராசா, இதுவொரு சாதாரண மாநாடு அல்ல எனவும், மாறாக பல ஆண்டுகளாக செவிமடுக்கப்படாத தமது குரலை சர்வதேசத்துக்குக் கேட்கச்செய்வதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையும், அவர்களுக்கான நீதியையும் கோரி நீண்டகாலமாகப் போராடிவரும் தாய்மார் உயிரிழந்தாலும், 'வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது?' என்ற கேள்வி இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் உண்மை மற்றும் நீதி கோரி நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்ட வரலாறு மற்றும் அவர்களது வலியைப் பதிவுசெய்யும் வகையிலான நூல் வெளியீடும், அதனைத்தொடர்ந்து வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய கண்காட்சியும் இடம்பெற்றது.





