வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப்போராட்டமும், நூல் வெளியீடும்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் நீதிகோரி நீண்டகாலமாக முன்னெடுத்துவரும் போராட்டத்தை ஆவணப்படுத்தும் வகையில் புத்தமொன்று வெளியிடப்பட்டது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு 30-08-2026 அன்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவின் ஒருங்கிணைப்பில் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று நடைபெற்றது.
வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரி 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி வீதியோரப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் நீதிகோரி நீண்டகாலமாக முன்னெடுத்துவரும் போராட்டத்தை ஆவணப்படுத்தும் வகையில் புத்தமொன்று வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தும் அதேவேளை, அவர்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள், அதன் பின்னர் கற்பூரச்சட்டி ஏந்திய நினைவகூரல் நிகழ்விலும் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் எனவும், இவ்விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு அவசியம் எனவும் வலியுறுத்தினர்.





