இந்து சமுத்திரத்தில் ஈரான் கப்பல்களுக்கு நடந்தது என்ன?
குறித்த கப்பல் குழுவின் எண்ணிக்கை 80ஆக இருக்கின்றபோது கொச்சியை அக்கப்பல் சென்றடைந்தபோது 183 பேர் அதில் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக கொச்சி கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் 'மிலான் 2026' இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. 13ஆவது தடவையாக நடைபெறும் மிலான் நிகழ்வில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் கடற்படை மதிப்பாய்வும், சர்வதேச கூட்டுப் பயிற்சிகளும், கண்காட்சியும் நடைபெற்றிருந்தது.
ஈரானின் மூன்று போர்க் கப்பல்கள் இந்தப் பயற்சியில் பங்கேற்றிருந்தன. ஐ.ஆர.;ஐ.எஸ் டேனா, ஐ.ஆ.ர்ஐ.எஸ் புஷேர், ஐ.ஆர.;ஐ.எஸ் லவான் ஆகிய மூன்று கப்பல்களே அவையாகும். மிலான் 2026 இல் பக்க நிகழ்வொன்றில் பங்கேற்ற இலங்கை கடற்படைத் தளபதி உள்ளிட்ட குழுவினருக்கும் ஈரானிய குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு வழக்கமான உரையாடல்களில் நடைபெறுகின்ற மரபு ரீதியான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 26ஆம் திகதி ஈரான்இ இலங்கையில்; தனது கப்பல்களை நங்கூரமிடுவதற்கான கோரிக்கையை வெளிவிவகார அமைச்சிற்கு நேரடியாகவே முன்வைத்திருந்தது. அத்துடன் குறித்த விஜயத்துக்கான காரணமாக 'இருநாட்டு ஒத்துழைப்புக்கான விஜயம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு கப்பல்களை அனுமதிப்பதற்காக பின்பற்றப்படும் நடைமுறையை அக்கப்பல்களுக்கு அனுப்பியிருந்தது. இதனையடுத்து இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகம் வெளிவிவகார அமைச்சிடம் தமது கப்பல்களை மார்ச் 9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் நங்கூரமிடுவதற்கு அனுமதி கோரியிருந்தது.
அனுமதி தொடர்பில் இலங்கை ஆராய்ந்து கொண்டிருக்கையிலேயே ஈரானின் மூன்று கப்பல்களும் இலங்கையின் தெற்கு கடற்பரப்பின் நீட்சியாக உள்ள சர்வதேச கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையில் பெப்ரவரி 27ஆம் திகதியன்று காலையில் ஐ.ஆர்.ஐ.எஸ் புஷேர் கப்பலில் இருந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவருக்கு சிகிச்சைகள் அளிப்பதற்கு உதவுமாறும் இலங்கை கடற்படையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த கடற்படை வீரரும் அதிகாரி ஒருவரும் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் எல்லைகளில் காத்திருக்கும் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தது. இதற்குள் 28-02-2026அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான போரை பிரகடனப்படுத்தியதோடு இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதல்கள் தீவிரமாக்கப்பட்டன. பதிலுக்கு ஈரானும் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகளை தாக்கியது.
இலங்கை அரசாங்கம் ஈரானிய கப்பல்களை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில் நீண்ட ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தது. இதற்குள் ஈரானிய கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லையை அண்மித்துள்ள சர்வதேச பொருளாதார வலயத்துக்குள் பிரவேசித்திருந்தன.
எவ்வாறாயினும் இலங்கையின் தரப்பில் முறையான பதிலளிப்புக்கள் இல்லாமையின் காரணமாக அக்கப்பல்கள் காத்திருந்தன. இவ்வாறான நிலையில், 04-03-2026அன்று அமெரிக்காவின் மார்க் 48 என்ற நீர்மூழ்கிக் கப்பல் டொர்பிடோ ஏவுகணையைப் பயன்படுத்தி ஐ.ஆர.;ஐ.எஸ் டேனாவை தாக்கியழித்தது.
குறித்த தினமன்று அதிகாலை 5.08 - 5.30 ற்கும் இடைப்பட்ட நேரத்தில் காலி துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் கப்பலொன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பிரதேசத்தில் அனர்த்த சமிக்ஞை எழுப்பப்பட்டதை அடுத்து இலங்கை கடற்படையும், விமானப்படையும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு படுகாயமடைந்த நிலையில் இருந்த 32 பேரை மீட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் 90 உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த கப்பல் மட்டும் அமெரிக்க நீர்மூழ்கியால் இலக்கு வைக்கப்படுவதற்கு காரணம் அது தாக்கியழிக்கும் திறன்கொண்ட முழுமையான போர்க்கப்பல் என்பதாலாகும். இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எடுப்பதில் காணப்பட்ட இழுபறியான நிலைமைகளால் இக்கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசிக்க முடியாது போயிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
ஐ.ஆர.;ஐ.எஸ் டேனா தாக்கப்பட்டு சொற்ப மணித்தியாலங்களில் ஈரானின் பிறிதொரு கப்பலான ஐ.ஆர.;ஐ.எஸ் புஷேர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவசர உதவிக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்குமாறு கோரப்பட்டது. எனினும் அரசாங்கம் அதற்கு உடனடியாக பதிலளித்திருக்கவில்லை.
11 மணித்தியாலங்கள் தாமதமான நிலையில்தான் அக்கப்பலில் இருந்தவர்களை மீட்பதென்றும் குறித்த கப்பலை கொழும்புக்கு அழைத்துவந்து பின்னர் திருமலைக்கு அனுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
11 மணிநேர கால இடைவெளிக்குள் இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்புச் சபையை கூட்டியது. அதில் குறித்த விடயம் சம்பந்தமாக நீண்ட நேரம் ஆராய்ந்தது. வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்இ இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சாருடனும், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் செய்யெத் அப்பாஸ் அரக்ச்சியுடனும் அவசர உரையாடல்களை செய்திருந்தார்.
இதனடிப்படையில்தான் இறுதியில் தத்தளித்துக்கொண்டிருந்த ஐ.ஆர.;ஐ.எஸ் புஷேர் கப்பலை கொழும்புத்துறைமுகத்துக்கு அழைத்து வந்து அதிலிருந்த 208 பேரையும் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் வெலிசறை கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.
கப்பல் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலிய ஊடகத்துக்கு செவ்வியளித்த அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பான்ஸ் ஈரானின் ஐ.ஆர.;ஐ.எஸ் கப்பல் தாக்கப்பட்டபோது தமது நாட்டு வீரர்கள் மூவர் அமெரிக்காவின் நீர்மூழ்கியில் இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எவ்வாறாயினும் அவரது இக்கருத்தானது இப்போது புதிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளதோடு இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமெரிக்க நீர்மூழ்கிகளின் நடமாட்டத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஈரானின் கப்பல்களை உட்பிரவேசிப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு எடுத்துக்கொண்ட தாமதம் தாக்குதல் நிகழ்வதற்கு காரணமாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் எதிரணிகளால் முன்வைக்கப்படும் அதேவேளை இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்தின் பலவீனமாகவும் அது விமர்சிக்கப்படுகின்றது.
ஈரானின் இரண்டு கப்பல்களின் நிலைமை வெளிப்படையாக இருக்கின்ற நிலையில் 06-03-2026 அன்று வரையில் மூன்றாவது கப்பலின் நிலைமை பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. அதுபற்றி ஈரான் தூதரகமும் வாய்திறக்கவில்லை. இவ்வாறான நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஐ.ஆர.;ஐ.எஸ் லவான் என்ற மூன்றாவது கப்பல் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தை சென்றடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் குழுவின் எண்ணிக்கை 80ஆக இருக்கின்றபோது கொச்சியை அக்கப்பல் சென்றடைந்தபோது 183 பேர் அதில் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக கொச்சி கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள ஈரானிய கப்பல்களினதும், கடற்படை வீரர்களினதும் அடுத்தகட்டம் சம்பந்தமாக முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் ஈரான் தூதரகம் அவர்களை பொறுப்பேற்பதில் ஆர்வம் காண்பிக்கின்றது. அவ்வாறு பொறுப்பேற்கப்படுபவர்கள் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவார்கள், கப்பல்கள் எவ்வாறு சர்வதேச கடல் எல்லை ஊடாக பயணிக்கும் என்பது மிகப்பெரும் கேள்வியாகவே உள்ளது.





