அரசாங்கத்துக்குச் சொந்தமான எட்டு நிறுவனங்களில் ஊழல் மோசடி: 23 முறைப்பாடுகள்
இந்த நிறுவனங்களின் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளைச் சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்துக்குச் சொந்தமான எட்டு நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ள ஊழல் மோசடி தொடர்பான 23 முறைப்பாடுக
ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நேரடியாக அனுப்புவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக
தேசிய மக்கள் சக்தி எம்.பி நிஷாந்த சமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 21-07-2026அன்று இடம் பெற்ற கோப் குழு அறிக்கைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், அரசாங்கத்துக்குச் சொந்தமான எட்டு நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்டுள்ள ஊழல் மோசடி தொடர்பான 23 முறைப்பாடுகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நேரடியாக அனுப்புவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது. பொது தொழில் முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் விசாரணைகளின் போது வெளிச்சத்துக்கு வந்த முறைப்பாடுகளே இதில் உள்ளடங்குகின்றன .
பாராளுமன்ற நிலையியற்கட்டளை 120 இன் உப பிரிவு (4) நிறுத்தப்பட்டுள்ளது, அதன்படி பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விடயங்களை கண்டறிய நேரடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி மேலதிக விசாரணைகளையும் சட்ட நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கோப் குழுவின் அறிக்கைகள் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், அவற்றின் அடிப்படையில் உடனடியாக சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை என்ற பொதுமக்களின் நீண்டகால விமர்சனங்களுக்கு இந்த திருத்தம் தீர்வாக அமையும்.
நாட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர், அதனால் கோப் மற்றும் அரச கணக்குகள் பற்றிய குழுவான கோபா ஆகியவற்றின் செயற்பாடுகள் மீது மக்களின் கவனம் அதிகரித்துள்ளது.
அரச நிறுவனங்கள் பற்றிய குழு இதுவரை 457 அரச நிறுவனங்களை அழைத்து அவற்றின் நிர்வாகம், நிதி முகாமைத்துவம் மற்றும் சேவை வழங்கல் தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகளைச் சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் ஆராயப்படுவதுடன், அவற்றை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
புதிய அரசியல் கலாசாரத்தின் கீழ் ஊழல் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், நேர்மையாகப் பணியாற்றும் அரச அதிகாரிகள் அச்சமின்றி தங்களது கடமைகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.





